தி.மு.க முறைகேடாக வெற்றி பெற்றுள்ளது: மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு!!

கோவை : கோவையில் மக்களிடயே எடுத்த சர்வே மூலம் மக்கள் அதிமுக.,வுக்கு தான் வாக்களித்தனர் என்பது தெரிகிறது என்றும், திமுக முறைகேடாக வெற்றி பெற்றுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் முன்பு உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்தும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் மேலும், தமிழகம் முழுவதும் அதிமுக.,வினர் மீது போடப்பட்டு வரும் பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை மாவட்ட அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது : திமுக அரசை கண்டித்தும்,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை வேகமாக முடிக்க வலியுறுத்தியும், கோவை அதிமுக தொண்டர்கள் மீதான போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த கூட்டத்தை பார்த்தாலே இது ஆளும் கட்சியா எதிர்கட்சியாக என்று நினைப்பார்கள். திமுக ஆட்சியில் எப்போதும் பொய் வழக்கு போடுவார்கள். கள்ள ஓட்டு போட வந்த 12 வழக்குகள் உள்ள ஒரு ரவுடியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து கொடுத்தார். அந்த ரவுரையை ஆஸ்பத்திரியில் படுக்க வைத்துவிட்டு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சிறையில் அடைத்தது திமுக.

கோவையில் நியாயப்படி தேர்தல் நடந்தால் 85 இடங்களுக்கு மேல் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம். கொலுசு பணம் மற்றும் போலீஸ் துணையுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் பணத்தை வீசி எறிந்து சென்றார்கள். எங்கு இருந்து வந்தது அந்த பணம்.

வாக்கு பதிவின் போது மாலை 5-6 எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது பாருங்கள். எங்களுக்கு கிடைத்த வாக்கை திமுக.,வுக்கும், திமுக.,வுக்கு கிடைத்த வாக்கை எங்களுக்கும் மாற்றி விட்டனர்.

இதற்கு பதிலாக போலீசார் வேறு வேலையை பார்க்க போகலாம் . அடிமை போல் உள்ளீர்கள். வெட்கமாக இல்லையா? நெஞ்சை நிமிர்த்து நியாயமாக நடந்து கொள்ளுங்கள் உங்களை என்ன செய்ய முடியும் வேறு இடத்திற்கு மாற்றுவார்கள். வேறு என்ன செய்ய முடியும். இதற்கு எல்லா அதிமுக வினர் அஞ்சமாட்டோம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்தை படுகொலை செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது. 9 மாத ஆட்சியில் திமுக புதிதாக ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை எப்படி மக்கள் ஓட்டு போடுவார்கள்.

சர்வே எடுத்தோம். எல்லோரும் இரட்டை இல்லைக்கு தான் வாக்களித்தேன் என்கின்றார்கள். மக்களை முதுகில் குத்தி திமுகவினர் வெற்றிபெற்றுள்ளனர். மேயர் ஆக போகிறீர்கள் இனியாவது மக்களுக்கு ஏதாவது நல்லதை செய்யுங்கள்.

அதிகாரிகள், போலீஸ், திமுக கூட்டணி அமைத்து மக்களை தோற்கடித்துள்ளது. கம்யு, காங் ஜால்ரா அடித்துக் கொண்டுள்ளனர். உலகத்திலேயே கோவை போல் ஒரு தேர்தல் நடந்தது கிடையாது இது ஒரு ஜனநாயக படுகொலை. கோவையில் தொழில்களை முடங்கியுள்ளன.

செங்கல் எடுக்க ண் எடுக்க முடியவில்லை. விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் கட்டிடங்கள் கட்ட முடியவில்லை என அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன இனியாவது மக்களை தொழில் செய்ய விடுங்கள். பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன அந்தத் திட்டங்களை கொண்டு வாருங்கள் சாலை வசதி பாலம் வசதி ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவற்றை மீண்டும் கொண்டு வாருங்கள். பொய் வழக்கு போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறோம் என அவர் பேசினார்.

இதில் எம்எல்ஏக்கள் கே ஆர் ஜெயராம் அமுல் கந்தசாமி, ஏ கே செல்வராஜ் சூலூர் கந்தசாமி தாமோதரன் புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர் முன்னாள் எம்எல்ஏக்கள் எட்டிமடை சண்முகம் ஓகே சின்னராஜ் கஸ்தூரி வாசு உள்பட 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்