பிரதமர் செய்தால் மட்டும் திமுக விமர்சனம்.. முதல்வர் துபாய் பயணம் குறித்து வானதி சீனிவாசன் கருத்து !!

பாஜகவின் வானதி சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வரவேற்பதாக தெரிவித்தார். ஆனால் மற்றொரு கருத்தையும் அவர் திமுகவினருக்கு கூறியுள்ளார்.

புதுச்சேரியில் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேசிய அளவிலான மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் புதுச்சேரியில் முதன் முறையாக நடைபெற உள்ளது. அனைத்து மாநில நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அதன் பலன்கள் குறித்து விளக்கபட உள்ளது என்று கூறினார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உள்ள நிலையில் அடுத்ததாக ஆந்திரா, தமிழகம், மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கும்.

புதிய முதலீடுகளை உருவாக்கவும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும் வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் பயணத்தை வரவேற்கிறோம். அதே சமயத்தில் நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. இதே நோக்கத்திற்காகத் தான் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்குச் சென்றார். அப்போதெல்லாம் திமுக விமர்சனம் செய்தது, என அவர் கூறினார்.