குஜராத்தில் இன்று டிஜிட்டல் திருவிழா… அனைவர் கவனத்தையும் ஈர்த்த 7 தமிழர்களும்..மோடியும்.. கலந்துரையாடல்… !!

விருதுநகர்: குஜராத்தில் இன்று டிஜிட்டல் திருவிழா நடக்க உள்ள நிலையில், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் உட்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பங்கேற்கின்றனர்.

இவர்கள் பிரதமர் மோடியுடன் டிஜிட்டல் பரிவர்த்தனையால் பெற்ற பயன் குறித்து கலந்துரையாடுகின்றனர்.

குஜராத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.. குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.

இந்த மாநிலத்தில் மறுபடியும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது… ஆனால், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸோ, இந்த முறை ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

மற்றொரு பக்கம், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியும் குஜராத் தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது. வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டி நிலவிய குஜராத் மாநிலத்தில், இந்த முறை மும்முனை போட்டி ஏற்பட உள்ளது. இதனால் சொந்த மாநிலமாக குஜராத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில்தான், இந்தியா முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், இன்றைய தினம், அதாவது ஜூலை 4 ம் தேதி குஜராத்தில் “டிஜிட்டல் மஹோத்தேவ்” நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனையில் சிறந்து விளங்கும் நபர்களை அழைத்து பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இதில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 7 பேர் தேர்வாகி உள்ளனர். அதில் சென்னையை சேர்ந்த 3 பேரும், ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பேரும், விருதுநகரை சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 7 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வங்கியில் முத்ரா கடன் பெற்று மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறார். இதில் முழுக்க முழுக்க க்யூ.ஆர்., கோடு மூலம் பண பரிவர்த்தனை செய்கிறார்.இதே போல் சாத்துார் கத்தாளம்பட்டியை சேர்ந்த ராமஜெயம், மீன்வளர்ப்புக்காக வங்கியில் கடன் பெற்று ‘ரூபே கே.சி.சி., கார்டு’ எனப்படும் விவசாயி கடன் அட்டை மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார். இதே போல் ராமநாதபுரத்தை சேர்ந்த சிவநாதன், விக்னேஷ், சென்னையை சேர்ந்த அய்யனார், ராஜ்பாரத், பாபு ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

நேற்றைய தினம், தெலுங்கானா பாஜக மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ”குடும்ப அரசியல், அரசியல் சாதிய வாதம், திருப்திப்படுத்தும் அரசியல் ஆகியவை மிகப்பெரும் பாவங்களாக உள்ளது. இந்தியா பல ஆண்டுகளாக துன்பங்களை அனுபவித்ததற்கு இவைகளே காரணம். ஆந்திரா, தமிழ்நாடு, ஒரிசா ஆகிய மாநிலங்களின் அதிகாரத்தை பாஜக கைப்பற்றும்” என்று அறிவித்திருந்தார்.. தமிழகத்தை குறி வைத்து பாஜக அரசியல் செய்து வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த 7 பேரை இன்று அழைத்து பிரதமர் கலந்துரையாட உள்ளது கவனத்தை பெற்று வருகிறது.