டிஐஜி விஜயகுமார் தேனிக்காரர்.. சொந்த ஊரில் இறுதிச்சடங்கு… அப்பா ஓய்வு பெற்ற வி.ஏ.ஒ. அம்மா ஓய்வு ஆசிரியை..!

கோவை: தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உடல் இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரைப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் டிஐஜி விஜயகுமார். இவரது அப்பா வெள்ளையா கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். அதேபோல் விஜயகுமாரின் தாய் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். அப்பா, அம்மா என இருவருமே அரசுப் பணியில் இருந்ததாலோ என்னவோ இவருக்கும் அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற கனவு இருந்திருக்கிறது.

இதையடுத்து கடந்த 2003ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் நேரடி டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த இவர் அதன் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி அதில் தேர்ச்சி பெற்றி 2009ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். ஆனார். தேனி மண்ணிற்கேற்ற வீரமும், தீரமும் விஜயகுமாரிடம் நிறையவே இருந்ததால் சவாலான கேஸ்களையும் சாதுர்யமாக கையாண்டு உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் பெற்று வந்தார்.

காஞ்சிபுரம், கடலூர், நாகை மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக இருந்த அவர் சென்னை அண்ணா நகர் துணை ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் டிஐஜி ஆக புரோமோஷன் வழங்கப்பட்டு கோவையில் பணியமர்த்தப்பட்டார். ஆன்மிகத்தில் அதிகம் ஈடுபாடுடைய விஜயகுமார் அப்பா, அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர்.

மகன் காவல்துறையில் உயர் பொறுப்புகளை வகித்தும் அரசு குடியிருப்புகளில் அவர் இருந்தும் சொந்த ஊரான தேனியிலேயே வசித்து வருகிறார்கள் டிஐஜி விஜயகுமாரின் பெற்றோர். தேனி ரத்தினம் நகரில் உள்ள விஜயகுமார் இல்லத்தில் உறவினர்கள் குவிந்து வருகின்றனர். மகனின் மறைவுச் செய்தி அறிந்து விஜயகுமாரின் அம்மா துடிதுடித்து அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.

கோவையில் உடற்கூராய்வு முடிந்த பின்னர் இறுதிச்சடங்கிற்காக டிஐஜி விஜயகுமாரின் உடல் தேனி கொண்டு செல்லப்படவுள்ளது. இதனிடையே தேனி மாவட்ட காவல்துறையினர் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை கவனித்து வருகின்றனர்.