தமிழக சட்டம் – ஒழுங்கு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை..!

சென்னை: தமிழக சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு நிலை சரியில்லை என்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம், கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விவகாரம், திருச்சி ராம ஜெயம் கொலை வழக்கு சம்பவம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப் பொதுமக்கள் எதிர்ப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசித்தார்.

வரும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் ரவுடிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஜாதி, மத, மோதல்கள் நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அமைதியாக வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டார்.

இக் கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.