ஆடி கார்த்திகையை ஒட்டி சதுரகிரிக்கு ஏராளமான பக்தர்கள் சென்ற நிலையில் கூட்டநெரிசலால் பலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் சிவராத்திரி அமாவாசை தினங்களில் பக்தர்கள் மலை ஏறி சென்று வழிபடுவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறாக தற்போது ஆடி அமாவாசைக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாட்டிற்காக சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அதிகமானதால் மதியம் 12 மணியளவில் தாணிப்பாறை அடிவாரம் வனத்துறை கேட் மூடப்பட்டு பக்தர்கள் மலையேறுவது என்று நிறுத்தப்பட்டது
ஆனால் வருசநாட்டு துறை பாதை வழியாகவும், வாழைத்தோப்பு பாதை வழியாகவும் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து மலை ஏறி சென்றதால் மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமானது. அதேபோல சாமி தரிசனம் முடித்துவிட்டு கீழே இறங்கிய பக்தர்கள் ஆறு மணி முதல் கீழே இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பக்தர்கள் பலர் உணவு குடிநீர் இன்றி பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடைசி நாளான நேற்று பக்தர்கள் ஏற முழுவதும் தடை விதிக்கப்பட்ட நிலையில் கூட்ட நெரிசலில் மூன்று பெண்கள் மூச்சு திணறல் காரணமாக மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சதுரகிரியில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்த நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை என்று பக்தர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு எழுந்துள்ளது..
Leave a Reply