கோவை மாணவர்களின் விவரங்கள் விற்பனை… ஸ்காலர்ஷிப் மோசடியில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.!!

ஸ்காலர்ஷிப்’ வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர்கள், மாணவர்கள் விபரங்களை விலைக்கு வாங்கியதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர், பெற்றோர் விபரம், போன் நம்பர்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிப் படிப்பு முடித்து கல்லுாரியில் சேரும் மாணவ, மாணவியர் பலர், அரசிடம் கல்வி உதவித் தொகை வேண்டி விண்ணப்பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப்பம் அளிப்பவர்களின் பெயர், முகவரி, போன் நம்பர்களை கைப்பற்றிய மோசடி கும்பல், மாணவர், பெற்றோரை போனில் அழைத்து நுாதனமாக ஏமாற்றி பணம் பறித்த சம்பவம், கோவையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதில் ஈடுபட்ட, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள், தமிழகம், பிற மாநிலங்களை சேர்ந்த, 500 க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது. பாதிக்கப்பட்டோர் அனைவரும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள். அவர்களை நுாதனமாக, மோசடி கும்பல் ஏமாற்றி உள்ளது. ‘ஸ்காலர்ஷிப்’ பணம் அனுப்பி விட்டது போன்ற போலியான ஆவணங்களை தயார் செய்வதற்கு, மோசடி செயலியை பயன்படுத்தியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறும் போது:-

மோசடி கும்பலுக்கு மாணவர்களின் விபரம், போன் நம்பர் எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்தப்பட்டது. ஆன்லைன் தளம் வாயிலாக விலைக்கு வாங்கியதாக, கைதான நபர்கள் தெரிவித்து உள்ளனர். ஆன்லைன் நிறுவனத்தினருக்கு, இந்த தகவல்கள் எப்படி கிடைத்தன என்று அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

மோசடி கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள், போலீசாரின் கண்காணிப்பில் உள்ளன. அந்த மொபைல் போன்களுக்கு, இன்னும் கூட, பாதிக்கப்பட்ட அப்பாவிகள் போன் செய்த வண்ணம் உள்ளனர். ‘தங்களுக்கு இன்னும் ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை; எப்போது பணம் கிடைக்கும்’ என்று விசாரிக்கின்றனர். இனியாவது, இப்படி ஒரு மோசடி நடப்பதை மாணவ, மாணவியர், பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும். முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து, போனில் அழைப்பு வந்தால் அப்படியே நம்பி விடக் கூடாது. யாராவது மொபைல் போனில் ‘க்யூஆர்’ கோடு ஸ்கேன் செய்யும்படி கூறினால், செய்யக் கூடாது. இவ்வாறு, கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசு கல்வி நிறுவனங்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியரின் பெயர், முகவரி, பெற்றோர் போன் நம்பர் போன்ற விபரங்களை பல்வேறு காரணங்களுக்காக சேகரிக்கின்றனர். ஆண்டுக்கு பல முறை இந்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள், வெவ்வேறு அரசுத் துறை அலுவலகங்களை கடந்து செல்கையில், சட்ட விரோதமாக ‘டெலிமார்க்கெட்டிங்’ நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு விடுகின்றன. அவற்றை கிரெடிட் கார்டு விற்பனை ஏஜென்சிகள், தனியார் நிதி நிறுவனங்கள், பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

கடைசியில், குற்றவாளிகளின் கைகளுக்கும் தகவல்கள் சென்று விடுகின்றன. எனவே, அரசு துறைகளில் இருந்து மாணவர், பெற்றோர் குறித்த தகவல்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க, அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.