துணிந்து செல்… தடைகளே இல்லை… பல துறைகளில் சாதித்து அசத்தும் பெண்கள்… முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் சி.ஆர்.பி.எஃப் ஐஜி-களாக நியமனம்..!!

துணிந்து செல், தடைகளே இல்லை” என்பது போல், பல துறையிலும் பெண்கள் தங்களது காலடித் தடத்தைப் பதித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் மத்திய ரிசர்வ் காவல்படையில் இருந்து (Central Reserve Police Force – CRPF) சீமா துண்டியா (Seema Dhundiya) மற்றும் ஆனி ஆபிரஹாம் (Annie Abraham) ஆகிய இரு பெண் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (IG) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

கடந்த 1987-ம் ஆண்டு பதவியில் சேர்க்கப்பட்டு, பணியில் இருந்த இவர்களுக்கு தற்போது பதவி உயர்வு கிடைத்துள்ளது.

இதில் சீமா துண்டியா சி.ஆர்.பி.எஃப் – ன் பீகார் பிரிவுக்குத் தலைமை தாங்க உள்ளார். ஆனி ஆபிரஹாம் சி.ஆர்.பி.எஃப் – ன் விரைவு நடவடிக்கை படையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1992-ம் ஆண்டு விரைவு அதிரடிப் படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்ட பின், முதன்முறையாக ஒரு பெண் தலைமை அதிகாரியாக பணிபுரிவது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை அடைவதற்கு, இருவரும் பல தடைகளைக் கடந்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தடைக்கற்களை உடைத்து புதிய பாதையை அமைத்ததற்காக, இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.