செக் மோசடி வழக்கு: தி.மு.க எம்.எல்.ஏ வுக்கு பிடிவாரண்ட்.!!

குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் மாணிக்கம். 62 வயதான இவர் கரூரைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவரிடம் கடந்த ஆண்டு 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்தும் விதமாக மாணிக்கம், வங்கி காசோலை ஒன்றை ராஜம்மாளிடம் தந்திருக்கிறார்.

அந்த காசோலையினை வங்கியில் செலுத்தியபோது உரிய தொகை இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜம்மாள் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கின் விசாரணையை அடுத்து மாணிக்கம் நேரில் ஆஜராக மூன்று முறை சம்மன் அனுப்பி இருக்கிறது நீதிமன்றம்.

கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி, டிசம்பர் மாதம் 2ஆம் தேதி மற்றும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி என்று மூன்று முறை நீதிபதி சம்மன் அனுப்பி இருக்கிறது நீதிமன்றம். ஆனால் மூன்று முறையும் எம்எல்ஏ மாணிக்கம் ஆஜராகாமல் இருந்திருக்கிறார். இதையடுத்து நான்காவது முறையாக நேற்றைய தினமும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

நேற்றைய தினமும் அவர் ஆஜராகவில்லை என்பதால் எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி சரவனபாபு. இதனால் எம்எல்ஏ மாணிக்கம் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

செக் மோசடி வழக்கில் ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏவுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருப்பது திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .