வயலின் நடுவே காளை வடிவில் நெல் சாகுபடி : அசத்திய வேதாரண்யம் விவசாயி..!

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே காளைமாடு வடிவில் விவசாயி ஒருவர், தனது வயலில் சாகுபடி செய்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா நீர்மூளை ஊராட்சியில் உள்ள மாராச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகாளிதாஸ்(40). விவசாயி. இவர், தனது வயலின் நடுவே கலப்பினமாக இருந்து பெறப்பட்ட ஒரு அரியவகை நெல் ரகமான “சின்னார்” என்ற சிவப்பு நெல் ரகத்தை காளை வடிவத்தில் நட்டு அதற்கு தீவனமான குதிரைவாலி புல்ரகத்தை சின்னார் நெல்லை சுற்றி நடவு செய்திருந்தார்.

அந்த இரண்டு பயிர்களும் தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. வயலின் அருகே நின்று பார்க்கும்போது காளை மாடு வயலில் நிற்பது போன்ற தோற்றம் தென்படுவது அவ்வழியாக செல்லும் அனைவரையும் கவர்ந்துள்ளது. விவசாயியின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த அபூர்வ சாகுபடி குறித்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.