லக்னோ: மதுவுக்கு ‘சைட் டிஷ்’ இல்லாததால் அருகில் இருந்த நாய்க் குட்டிகளின் காதையும், வாலையும் அறுத்து இளைஞர் ஒருவர் சாப்பிட்ட கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களின் பெரும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறது.
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.
மனிதன்’ என்ற போர்வையில் குரூர மனம் படைத்த மனிதர்கள் சிலர் இன்னும் நம் மத்தயில் உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோன்ற மனிதர்களை தோற்றத்தை பார்த்து நாம் கண்டுபிடிக்க முடியாது. எனினும், அவர்களின் செய்கைகளும், பேச்சுகளும் சில சமயங்களில் அவர்களுக்குள் மறைந்திருக்கும் மிருகத்தை வெளிப்படுத்திவிடும். சிலர் சட்டத்துக்கு பயந்தும், சந்தர்ப்பம் கிடைக்காமலும் சக மனிதர்களிடத்தில் தங்கள் குரூர குணத்தை காண்பிக்காமல் இருப்பார்கள். ஆனால், மிருகங்களிடம் அவர்கள் தங்கள் குரூரத்தை வெளிப்படுத்துவார்கள். மிருகத்தை தானே துன்புறுத்துகிறார்கள் என இவர்களை நாம் அலட்சியமாக நினைக்கக் கூடாது. நாளை சந்தர்ப்பம் கிடைக்கையில் சக மனிதர்களுக்கு மிக கொடூரமான ஆபத்தை இவர்கள் விளைவிப்பார்கள். அப்படியொரு குரூர எண்ணம் படைத்த இளைஞர் ஒருவர் செய்த செயலைதான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.
உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் வால்மிகி (24). எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். மேலும், அப்பகுதியில் சிறு சிறு அடிதடிகளில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஒரு குட்டி தாதாவை போல அப்பகுதியில் அவர் வலம் வந்துள்ளார். இதனிடையே, முகேஷ் வால்மிகி தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது மதுவுக்கு சைட் டிஷ் வாங்க அவர்களிடம் பணம் இல்லை எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில், அவர்களுக்கு அருகே பிறந்து ஒரு வாரமே இரண்டு நாய்க் குட்டிகள் படுத்திருந்தின. இதையடுத்து, அந்த நாய்க் குட்டிகளை தூக்கிய முகேஷ், தன்னிடம் இருந்த சிறிய கத்தியால் ஒரு நாய்க் குட்டியின் வாலை அறுத்தார். இதில் அந்த நாய்க் குட்டி வலி தாங்காமல் கதறியது. பின்னர், மற்றொரு நாய்க் குட்டியின் இரண்டு காதுகளையும் முகேஷ் கத்தியால் வெட்டி எடுத்தார். பின்னர் அந்த வாலையும், காதுகளையும் உப்பில் தொட்டு அப்படியே அவர் சாப்பிட்டார். இதனிடையே, அந்த நாய்க் குட்டிகள் வலியில் அப்படியே மயக்கம் அடைந்தன.
இந்நிலையில், தான் செய்த இந்தக் கொடூர சம்பவத்தை வீடியோ எடுத்த முகேஷ், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களின் பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. மேலும், இந்த வீடியோவை பார்த்த பலர், அதனை காவல்துறை அதிகாரிகளுக்கும், விலங்குகள் நல வாரியத்துக்கும் ‘டேக்’ செய்தனர். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து முகேஷ் வால்மிகியை தேடி வருகின்றனர்.
Leave a Reply