கேரளாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – இனி பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்..!

கேரளாவில் கோவிட் -19 வழக்குகள் சற்று அதிகரித்து வருவதால், கேரள அரசின் சுகாதாரத் துறை, அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசங்களை அணியுமாறு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், ‘புதிய கோவிட் தோற்று மிகவும் எளிதாக பரவுகிறது. முன்னதாக, நிலைமையை ஆராய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தொற்றை அடையாளம் காண மரபணு பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1,134 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் 7,026 ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கோவிட்-19 முடிவடையவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி தயார் நிலை, இன்ஃப்ளூயன்ஸா தொற்றின் நிலையை கண்டறியவும் வலியுறுத்தியுள்ளார். 20 முக்கிய கோவிட் மருந்துகள், 12 இதர மருந்துகள், எட்டு இடையக மருந்துகள் மற்றும் ஒரு இன்ஃப்ளூயன்ஸா மருந்துகளின் இருப்பு மற்றும் விலை சுகாதாரம் அமைச்சகத்தால் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நோயாளிகள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் முகமூடி அணிவது உட்பட கோவிட்-க்கு உரிய முன்னெச்சரிக்கைகளுடன் இருக்க பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மூத்த குடிமக்கள் மற்றும் நோய்த்தொற்று உள்ளவர்கள் நெரிசலான பகுதிகளுக்குச் செல்லும்போது முகமூடி அணிவது நல்லது என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போது நாடு முழுவதும் உள்ள நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் மோடி எடுத்துரைத்தார்.

கேரளாவில் தற்போது புதிய வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசங்களை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.