ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் நிஷாந்த் (வயது 21) இவர் கோவை சின்ன வேடம்பட்டி, விநாயகர் கோவில் வீதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் எம். பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நிஷாந்த் மற்றும் அவரது நண்பர்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவை உள்பக்கம் பூட்ட வில்லை .நள்ளிரவில் திடீரென அறைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் நிஷாந்த் மற்றும் அவரது நண்பர்களை கிரிக்கெட் ஸ்டெம்புகளால் தாக்கி, அவர்கள் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின்கள், வெள்ளிக்காப்பு ரூ. 6,500 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதில் மாணவர் நிஷாந்த் பலத்த காயம் அடைந்தார்.அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.நள்ளிரவில் அறைக்குள் புகுந்து மாணவர்களை தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தக் கொள்ளை கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களை கிரிக்கெட் மட்டையால் தாக்கி நகை, பணம் கொள்ளை..!
