கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள் அதிகமாகி விட்டது என்று கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியும், திரைப்பட இயக்குனருமான ஞான ராஜசேகரன் கூறினார்.

கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந்திய புத்தக பதிப்பகங்கள் சங்கம் (பபாசி) ஆகியவை இணைந்து நடத்தும் 6-வது கோவை புத்தகத் திருவிழா பீளமேட்டில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

புத்தக வாசிப்பு வளர்கிறதா? என்ற விவாத அரங்கம் நடந்தது. மேலும் கைபேசி கனவுகள் என்ற நாடகமும் நடந்தது. மகளிருக்ககான இலக்கிய, புத்தக வினாடி வினா போட்டிகள் நடந்தன.

அதன் பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் எழுதிய பத்மராஜன் கந்தர்வனோ மனிதனோ, மற்றும் முதுகுளம் ராகவன்ப்பிள்ளை என்ற இரண்டு புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியீட்டு விழா நடந்தது. விழாவுக்கு வந்தவர்களை கொடிசியா தலைவர் திருஞானம் வரவேற்று பேசினார்.

விழாவில் திரைப்பட இயக்குனரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஞான ராஜசேகரன் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் சமீரன் எழுதிய நுல்களை வெளியிட அவற்றை இலக்கிய கூடல் தலைவர் டி.பாலசுந்தரம் பெற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து ஞான ராஜசேகரன் பேசியதாவது:

சினிமா என்பது ஒரு வியாபாரம் தான். ஏனென்றால் அதில் முதலீடு, லாபம், நஷ்டம் எல்லாம் இருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியில் சினிமா பற்றி பேசுகிறார்கள். சினிமாவில் கதை சொல்வதம், கேட்பதும் ஒரு சுவாரஸ்யமான விஷயம். ஆனால் இன்றைக்கு தமிழ் சினிமாவில் கதை சொல்வது மிகவும் குறைந்து விட்டது.

கொரோனாவுக்கு பிறகு சினிமா தியேட்டருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஓ.டி.டி.போன்ற தளங்களில் சினிமா வெளியிடுவது அதிகரித்து விட்டது. முன்பு தமிழ் சினிமா மிகவும் செழுமையாக இருந்த காலம். ஆனால் இன்றைக்கு தமிழ் சினிமாவில் 5 நடிகர்கள் நடிக்கும் படங்களை மட்டுமே அதிக மக்கள் பார்க்கிறார்கள். அது நல்லா இருக்கிறதா? இல்லையா என்று தீர்மானிப்பதற்கு முன்பே 3 நாளிலேயே அந்த படத்தின் முதலீட்டை விட பல மடங்கு எடுத்து விடுகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 900 தியேட்டர்களில் எல்லா காட்சிகளிலும் அதை திரையிடுகிறார்கள். இதனால் அந்த படம் அதிக பணத்துக்கு வியாபாரமாகி விடுகிறது. ஆனால் அதில் சினிமாவின் அடிப்படை விஷயம் இல்லை. 5 நடிகர்கள் நடிக்கும் படங்களில் கதை, புதிய சிந்தனை கிடையாது. தற்போது சினிமா படங்களில் வன்முறை அதிகரித்து விட்டது. வன்முறையை ரசிப்பது வன்முறையை விட மோசமானது என்று காந்தியடிகள் சொன்னார்.

ஆனால் இன்று அந்த வன்முறையை மக்கள் ரசிக்கிறார்கள். இது வேதனையாக உள்ளது. சினிமா என்றால் மனித குலங்களை, மனித உறவுகளை பேசுவது தான். ஆனால் இன்றைய சினிமாவில் 90 சதவீதம் வன்முறை தான் அதிகமாக உள்ளது. அது வன்முறை கலாசாரத்துக்கு வழி வகுத்து விடும். 1960 களில் வந்த பாசமலர் சினிமா படத்தில் அண்ணன், தங்கை பாசத்தை விளக்கும்.

இப்படி எல்லாம் இருந்த தமிழ் சினிமாவில் இன்று வன்முறை காட்சிகள் அதிகரித்து விட்டது. எனக்கு எந்த நடிகர் மீதும் கோபம் கிடையாது. தியேட்டருக்கு வரும் ரசிகர்களை இன்றைய சினிமா வியாபாரிகளாக்கி விட்டது. நாம் ரசிகர்களாக, ரசிக்கத் தான் தியேட்டருக்கு செல்கிறோம். ஆனால் சினிமா நம்மை வியாபாரிகளாக்குகிறது. எனவே இன்றைய தமிழ் சினிமாவை ஆராய்ச்சிக்குரிய ஒரு கலை வடிவமாக நாம் பார்க்க முடியாது. இந்த நிலை மாற வேண்டும்.

இங்கு வெளியிடப்பட்ட இரண்டு புத்தகங்களை எழுதிய ஜி.எஸ்.சமீரன் ஒரு ஆராய்ச்சியாளர் போல பல்வேறு தகவல்களை திரட்டி எழுதியிருக்கிறார். அவருடைய பணி பாராட்டத்தக்கது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து நூல் ஆசிரியர் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

என்னுடைய முதல் நூலை நான் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் 2-ம்ஆண்டு படிக்கும் போது எழுதினேன். அப்போது ஒரு சமூக வலைதளத்தில் இடம் பெற்ற வாசகர் மன்றத்தில் இடம்பெற்ற விவாதங்கள், சர்ச்சைகள் தான் என்னை புத்தகம் எழுத தூண்டியது.

தொடக்கத்தில் பரீட்சார்த்தமாகத்தான் நாமும் புத்தகம் எழுதலாமே என்று நினைத்து அந்த பணியை தொடங்கினேன். மக்களுக்கு புரியும் வகையில் எழுதலாமே என்ற நோக்கத்தில் தான் நான் இதை தொடங்கினேன். ஆராய்ச்சிக்காக பல்வேறு தகவல்களை திரட்டி நான் புத்தகங்களை எழுதியுள்ளேன்.

மலையாளத்தில் எழுதிய இந்த புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டால் வரவேற்பு இருக்குமா? என்று யோசித்தேன். மலையாளத்தில் புகழ் பெறாத நடிகர்கள் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுள்ளார்கள் அல்லவா? அது போல எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. நாம் வாழ்க்கையில் கடந்து வந்த விமர்சனங்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அது போல என்னுடைய புத்தகத்தில் என்னை பற்றி வந்த விமர்சனங்களும் முன்னுரையில் இடம் பெற்றுள்ளன. என் புத்தகங்களின் வெளியீட்டு விழாவுக்கு வந்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

விழாவில், விஜயா பதிப்பகம் வேலாயுதம், கோவை புத்தக திருவிழா தலைவர் விஜய் ஆனந்த், துணை தலைவர் ரமேஷ் குமார், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி, சுதாகர் மற்றும் கொடிசியா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கண்ணதாசனை கொண்டாடுவோம் என்ற இசை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இதில் மரபின் மைந்தன் முத்தையா, இசைக்கவி ரமணன் ஆகியோர் உரையாடினார்கள். இந்த நிகழ்ச்சியை சபா அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.