கோவை கொடிசியா வளாகத்தில் புத்தகத் திருவிழா – மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல்

கோவை புத்தகத்திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு.

 

கோவையில் வருகின்ற 22ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன், கோவையில் ஆறாவது புத்தகத் திருவிழா ஜூலை 22 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் கொரோனா தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார். கோவை கொடிசியா மற்றும் தென்னிந்திய பதிப்பாளர் சங்கம் இணைந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துவதாக தெரிவித்தார். இவ்விழாவில் 300க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஒரு லட்ச மாணவ மாணவிகளை இந்நிகழ்வில் கலந்து கொள்ள அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 28ஆம் தேதி 5000 மாணவர்கள் ஒரே இடத்தில் திருக்குறளை வாசிக்கும் நிகழ்வு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதேபோல் அனைத்து நாட்களிலும் மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வருடம் 3 இளம் படைப்பாளர்களுக்கு (நிழலி, சுரேஷ் பிரதீப், வடிவரசு) விருதுகள் வழங்க உள்ளதாகவும் கூறினார். மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருது வரலாற்று அறிஞர் குடவாயில் சுப்பிரமணியத்திற்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ரோட்டரி கிளப் மூலம் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு கூப்பன்கள் வழங்கி இலவசமாக புத்தகங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்விற்காக அரசு பேருந்துகளை அப்பகுதியில் இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்விற்கு அனுமதி இலவசம் எனவும், கிட்டத்தட்ட இரண்டு லட்சம் புதிய புத்தகங்கள் இதில இடம்பெறும் எனவும், கொரோனா கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுதான் அனைத்தும் நடைபெறும் என தெரிவித்தார்.

இதில் பேசிய கொடிசியா புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த், இந்நிகழ்வில் இளம் படைப்பாளிகளுக்கான விருது மூன்று பேருக்கும் 25,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் ரோட்டரி சார்பில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில், 3500 கட்டுரைகள் வந்துள்ளதாகவும் அதில் ஆயிரம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு 200 மதிப்புள்ள கூப்பன் மற்றும் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல் அப்துல் கலாமின் நினைவு தினத்தை ஒட்டி அப்துல்கலாமின் சீடர் தாமு பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 30ஆம் தேதி தொழிலாளர்களுக்கு மட்டுமான நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.