சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் உள்ளனர். நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு.
நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதனை நான் வரவேற்கிறேன்.நெல்லை தொகுதியில் தி.மு.க தோற்க கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். நெல்லை தொகுதியை பொருத்தவரை நான் கேட்ட கல்லூரி உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி தந்துள்ளார். தனிப்பட்ட முறையில் எனக்கும், அவருக்கும் உள்ள நட்பு ஆழமானது. அதற்காக கட்சிகள் என்று வரும்போது விட்டுக் கொடுக்க முடியாது.
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தல் ஆணையமும் பங்கு வகித்ததால் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி என்றால் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக இருந்ததா?பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். அதில் சுமார் 30 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர். 28 லட்சம் வாக்காளர்கள் வரை வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள். பின்னர் நீக்க தானே செய்வார்கள்.
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை பொருத்தவரை தமிழகத்தில் தி.மு.க வட்ட செயலாளர்களை வைத்துதான் இந்த வாக்காளர் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக அதிகாரிகளுக்கு நிர்பந்தம் கொடுக்கிறார்கள். அதிகாரிகள் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் மனு அனுப்பியுள்ளேன்.
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய அரசு மீது குறை சொல்கிறார்கள். வெளிநாடுகளில் இது போன்ற சம்பவம் நடந்தால் எதிர்க்கட்சிகள் ஒன்றாக திரண்டு ஆதரவாக பேசுவார்கள். ஆனால் இந்தியாவில் தான் இப்படி குறை கூறும் சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு காரணம் இங்கு இருப்பவர்களின் தேசப்பற்று குறைந்துவிட்டது தான்.தேர்தல் நேரத்தில் தான் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கிறது என்று கூறுகிறார்கள். பீஹாரில் தேர்தல் நடந்தது. டெல்லியில் கொண்டு வெடித்தது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனது வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டது குறித்து நான் அரசியலாக்க விரும்பவில்லை. அதேநேரம் எனக்கு யாரும் வெடிகுண்டு மிரட்டல் விடவில்லை.
வட மாவட்டங்களில் பா.ஜனதா பெரும் வெற்றியை வைத்து தென் மாநிலங்களிலும் அதே நிலை இருக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது.தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாகவே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. தற்போது வைகோ நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறுகிறார்கள். அவர் இந்த கோரிக்கைகளை முதல்-அமைச்சரை நேரடியாக சந்தித்து தெரிவித்தாலே போதும். எதற்காக இந்த வயதான காலத்தில் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க.வில் ஒரு காலத்தில் ஜே அணி, ஜா அணி என்று இருந்தது. பின்னர் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தார்கள். மிகப்பெரிய வெற்றியை பெற்றார்கள். அதேபோன்று தற்போது அ.தி.மு.க.வினர் அணிகளாக உள்ளனர். இது அ.தி.மு.க.
வில் வழக்கமாக நிகழக்கூடிய ஒன்றுதான்.அதே நேரத்தில் எங்கள் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கட்சி. தற்போது பீகாரில் பா.ஜனதா மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதனை கொண்டாடுகிறோம்.








