வங்கியில் பணம் செலுத்துவதாக கூறி பெண்ணிடம் ரூ 15 லட்சம் மோசடி- தாய்,மகன் மீது வழக்கு ..!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராணி (வயது 49). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (45). இவர்கள் இருவரும் பக்கத்து வீட்டுச் சேர்ந்தவர்கள் என்பதால் தோழிகளாக பழகி வந்தனர். ராணி ரூ. 15 லட்சத்தை கையில் வைத்திருந்தர். இதனை அறிந்த பாக்கியலட்சுமி அவரிடம் சென்று எதற்கு இவ்வளவு பணத்தை கையில் வைத்துள்ளீர்கள் என்றார். அப்போது ராணி சில வருடங்கள் கழித்து எனது மகள் திருமணத்திற்கு தேவைப்படும், அதற்காகவும் எனது மருத்துவ செலவிற்காகவும் வைத்துள்ளதாக கூறினார். அதற்கு பாக்கியலட்சுமி எனது மகன் சதுரகிரி வேத கிரிநாதன் (35) தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். அவரின் வங்கியில் பணத்தை செலுத்தி விடலாம். அவ்வாறு செலுத்தினால் திருமண காலம் வரும் வரை அதிக வட்டி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி ராணி அவரிடம் ரூ.15 லட்சத்தை கொடுத்தார். சில வருடங்கள் கழித்து ராணி, பாக்யலட்சுமியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போது அவர் தந்துவிடுவதாக கூறி நாட்களை கடத்தி வந்தார். ஆனால் இதுநாள் வரை அவர் பணத்தை திருப்பி தரவில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராணி இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சதுரகிரி வேத கிரிநாதனை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.