132 பேரை பலி கொண்ட சீனா விமான விபத்து… கருப்புப்பெட்டி கண்டெடுப்பு.!!

பெயிஜிங்: 132 பேருடன் விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

சீனாவின் தெற்கு பகுதியில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி, ஈஸ்டர்ன் ஏர்வேஸ் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 132 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

6 ஆண்டுகள் பழமையான போயிங் 737 ரக விமானமான இது குன்மிங்கிலிருந்து 123 பயணிகள், 2 விமானிகள், 7 விமான பணியாளர்கள் என 132 பேருடன் குவாங்சி மாகாணத்துக்கு புறப்பட்டது.

இந்த விமானம் வுஜோ நகருக்கு அருகே தெங்க்சியன் பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானது. தொடக்கத்தில் விமானத்தில் பயணித்த 132 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது. பின்னர் பயணிகள் அனைவரும் இறந்துவிட்டதாக சீன அரசு உறுதிபடுத்தியது. உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விமான விபத்து சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த முதல் விமான விபத்தாகும்.

விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணி நேரம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டும் ஏராளமான பயணிகளின் உடல்களை மீட்க முடியாமல் வீரர்கள் தடுமாறி வருகின்றனர். இதனிடையே விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

விமான விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்ற போதிலும், தெளிவான காரணங்கள் ஏதும் புலப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை கண்டறிய முதலில் விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டறிய வேண்டும் என்பதால் அதற்கென தனி குழு அமைத்து மீட்புப்படை உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்றது.

விமான விபத்து குறித்து விமான நிபுணர் ராபர்ட் மன் தெரிவிக்கையில், “நமக்கு கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில் பார்த்தால் விமானம் திடீரென்று கீழே விழுந்து இருக்கிறது. எப்படி விமானம் விழுந்தது என்பதை கண்டறிய வேண்டும். காக்பிட்டில் விமானிகள் என்ன பேசினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டால் எல்லாம் தெரிந்துவிடும். விமான பாகங்களை வைத்தும் நாம் கண்டுபிடிக்கலாம்.” என்றார்.

இந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டு எடுக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனை சீனாவின் விமான போக்குவரத்துறை ஆணைய செய்தித் தொடர்பாளர் லியூ லுசோங் உறுதிபடுத்தி இருக்கிறார். இதனை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் விரைவில் விமான விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.