பனை தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பெறுவது மிகவும் சிரமமாக உள்ளதால், 13 சதவீதம் பேர் முழுநேர குழந்தை தொழிலாளராக மாறிவிட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், புலம்பெயர்ந்த பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் மறுக்கப்படுவது குறித்து மாநில பனை தொழிலாளர்கள், கைவினைஞர்கள் சங்கம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இந்த ஆய்வறிக்கையை, சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.சுப்பையா நேற்று வெளியிட, தமிழ்நாடு பனை மர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பெற்றுக் கொண்டார்.
இந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: பனை தொழிலாளர்கள், ஆண்டில் 8 மாத காலத்துக்கு, குடியிருப்பு பகுதிகளில் இருந்து குறைந்தபட்சம் 20 கி.மீ. தொலைவில் உள்ள பனங்காடுகளில்தான் தொழில் நடத்தி வருகின்றனர். அங்கு மின்சாரம், குடிநீர், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. ஆண் 12 மணி நேரம் வேலை செய்தால், பெண் 15 மணி நேரம் வேலை செய்யவேண்டியுள்ளது. கருப்பட்டி வியாபாரிகளிடம் கடன் பெற்றே தொழில் செய்வதால் கருப்பட்டியை வெளி சந்தையில் விற்க முடியாது. இதனால் ஓராண்டுக்கு ரூ.1.86 லட்சம் வருமான இழப்பு ஏற்படுகிறது. இதனால், கடன் தொகை அதிகரிக்கிறது.
பனை தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பெற வேண்டுமானால், பனங்காட்டில் இருந்து சில கி.மீ. தூரம் நடந்து, பிறகு ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டும். இதனால் அவர்கள் முழுமையாக பள்ளிக்கு செல்ல முடியாமல் 58 சதவீதம் பேர் பகுதிநேர குழந்தை தொழிலாளராகவும், 13 சதவீதம் பேர் முழுநேர குழந்தை தொழிலாளராகவும் மாறிவிட்டனர்.
எனவே, மானியத்துடன் கடன்வழங்குதல், உற்பத்தி பொருட்களுக்கு அரசு சார்பில் விலை நிர்ணயம், காப்பீடு, இலவச தளவாட பொருட்கள், பள்ளி செல்ல போக்குவரத்து வசதி, சூரிய மின்சக்தி உபகரணங்கள் போன்றவற்றை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறும்போது, ”பனை தொழிலாளர் எண்ணிக்கை வெகுவாககுறைந்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக வாரியம் செயல்படாததால் பலர் கட்டிட, உப்பள தொழிலாளிகளாக மாறிவிட்டனர். பனை நல வாரியத்தில் உறுப்பினராக சேருமாறு அவர்களையும் அறிவுறுத்தி வருகிறோம்.
கருப்பட்டி உற்பத்தி என்பது கதர் வாரியத்தின்கீழ் உள்ளது. பனை தொடர்பான அனைத்தையும் பனைமர தொழிலாளர் நலவாரியத்தில் சேர்க்க வேண்டும். வேலை இல்லாத நாட்களில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும்” என்றார்..