முதல்வர் ஸ்டாலின் 23-ம் தேதி கோவை வருகை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..!

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி, இதில் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிரணி தொண்டரணி ஆகிய நிர்வாகிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கோவை மாவட்டத்தில் உள்ள 10சட்டமன்ற தொகுதிகளில் வரும் 12, 13, 14 தேதிகளில் திராவிட பயிலரங்கம் நடைபெறுகின்றது என்றும், ஒவ்வொரு பயிலரங்கிற்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை அழைத்து வர நிர்வாகிகளை அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

கோவை மாவட்ட திமுக விற்கு புதிய கட்சி அலுவலகம் கட்ட ஏற்பாடு நடைபெற்று வருகின்றது என கூறிய அவர், அவினாசி சாலையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், கட்டிடம் வடிவமைப்பு பணிகள் நடைபெறுகின்றது எனவும், மிக விரைவில் அடிக்கல் நாட்டப்பட இருப்பதாகவும், திமுக இளைஞரணி செயலாளர் தலைமையில் அடிக்கல் விழா நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்திற்கு வரும் 23ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வருகிறார் என கூறிய அவர், 24ந் தேதி கிணத்துக்கடவு பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் 82,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது எனவும், மாலை பொள்ளாச்சியில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடைபெறுகின்றது எனவும், இதில் மாற்று கட்சியிலிருந்து வந்தவர்கள், புதிய உறுப்பினர்கள் என 50 ஆயிரம் பேர் இணைய இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
அன்றைய தினம் முக்கிய நபர்கள் யார் இணைகின்றனர் என்பதை 24 ம் தேதி மேடையில் பாருங்கள் எனவும், அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். ஒன்றிய அரசின் புதிய மின்சார திருத்த சட்டத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகள், விசைத்தறி, குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்து உள்ளது எனவும், இந்த சட்டத்தை திரும்ப பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தும் எனவும் தெரிவித்தார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்ற பச்சை பொய்யை சொல்லி இருக்கின்றார் எனவும் 2012, 2013, 2014 என தொடர்ந்து மின் கட்டணம் அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.

அதிமுகவினரின் எஜமானர் பா.ஜ.க தான், அவர்கள் சொல்வதை தான் அதிமுக செய்யும் செய்யும் எனவும் சுயமாக யோசிக்கும் அளவுக்கு அவர்களுக்கு இல்லை என தெரிவித்தார். தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது தொடர்பாக கோவை கொடிசியா தலைமையில் தொழில் அமைப்பினர் மனு அளித்த இருக்கின்றனர் எனவும், நடைபெற இருக்கும் கருத்து கேட்பு கூட்டங்களில் அவர்களது கருத்துக்களை பதிவு செய்ய ஒரு வாய்ப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்த அவர், அவர்களின் கோரிக்கை மனுவை நானும் பார்க்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

கோவையைப் பொறுத்த வரை வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மாவட்டத்தில் உள்ள 3041 பூத் வாரியாக பணிகளைத் தொடங்கி இருக்கின்றோம் எனவும், கோவை மாவட்டத்தில் உள்ள 31 லட்சம் வாக்காளர்களில் 10 லட்சம் வாக்காளர்கள் திமுகவினர் என்ற நிலையை ஏற்படுத்த திட்டமிட்டு பணிகளைச் செய்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார். ரஜினி – ஆளுநர் சந்திப்பு அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்தது எனவும், அது தொடர்பாக எதுவும் தெரியாமல் கருத்து சொல்வது சரியாக இருக்காது என தெரிவித்தார்.