வெளிநாடுகளுக்கு பயணம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்..!

வெளிநாட்டு தொழில் முதலீடுகளை திரட்டுவதற்காக இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதலீடுகளை ஈர்க்க இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதல்-அமைச்சர் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம், துபாய், ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றபோது ரூ.6,100 கோடி தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அதே ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பானில் ரூ.1,342 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

2024ம் ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயினில் ரூ.3,440 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் அமெரிக்காவில் ரூ.7,616 கோடி முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

அதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார். இன்றிரவு 9 மணி அளவில் ஜெர்மனி சென்றடைகிறார். நாளை ஜெர்மனியில் திமுக அயலக அணி நிர்வாகிகள், முதல்வரை சந்திக்கின்றனர். வருகிற 1ம் தேதியன்று ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார்.

செப்டம்பர் 2ம் தேதியன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தொழில்முனைவோரை சந்தித்து உரையாடுகின்றார். அதன் பின்னர் செப்டம்பர் 3ம் தேதி லண்டனில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுப்பார். 4-ந் தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியம் சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அங்கு பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

6-ம் தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் உள்ள தமிழர் நல வாரியத்தின் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். 7-ந் தேதியன்று லண்டனில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறார். செப்டம்பர் 8-ந் தேதி அதிகாலை அவர் சென்னையை வந்தடைகிறார்.” என்று கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் முதல்வருடன், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.