டெல்லி: பல்வேறு விஷயங்களில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுடன் கருத்து மாறுபாடு கொண்டிருக்கிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டிற்கு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தை முடித்து திரும்பிய அவர், மேற்குறிப்பிடட இரண்டு விஷயங்கள் தொடர்பாக பிரதமரை சந்திக்க இருப்பதாக கூறியிருந்தார். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேதி கேட்கப்பட்டது. பிரதமர் கடந்த 24ம் தேதி அமெரிக்கவிலிருந்து வந்த நிலையில், இன்று முதல்வரை சந்திக்க தேதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்ட முதலவர், இரவு டெல்லி சென்றடைந்தார். அங்கு, எம்.பிக்கள் டி.ஆர் பாலு, கனிமொழி, கலாநிதிமாறன், திருச்சி சிவா உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பை அளித்திருந்தனர். நேற்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர், இன்று காலை 11 மணியளவில் பிரதமரை சந்தித்தார்.
இந்த சந்திப்பில், சமக்ரா சிக்ஷா கல்வி நிதி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி என இரண்டு விஷயங்கள் முக்கியமாக பேசப்பட்டிருக்கிறது. தவிர, நீட், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. மேலும் மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்க கூடாது, வெள்ள பாதிப்புக்கான போதுமான நிதி, தமிழ்நாடு மீனவர்கள் கைதுக்கு உரிய தீர்வு உள்ளிட்ட தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதல்வர் கொடுத்திருக்கிறார். பிரதமரை சந்தித்து முடிந்த கையோடு இன்று மாலையே சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.
Leave a Reply