உதயநிதியை அமைச்சராக்க ஆளுநரிடம் பரிந்துரைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. டிசம்பர் 14 ஆம் தேதி பதவியேற்பு..!

சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டு அமைச்சராக்க பரிந்துரை செய்து இருக்கிறார்.

இதனை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். வரும் டிசம்பர் 14 ஆம் தேதி காலை 9:30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடைபெறும்.” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட தயாரிப்பு, நடிப்பு என சினிமா துறையில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திமுக இளைஞரணி செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்றதில் இருந்தே கட்சிப் பணிகளில் முழுமூச்சாக இறங்கி செயல்பட்டு வந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்களில் தமிழ்நாட்டின் மூளை முடுக்குகளுக்கெல்லாம் சென்று திமுகவுக்காக வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின். எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தை கையில் எடுத்து ஒற்றை செங்கல்லோடு அவர் ஆற்றிய பிரச்சாரங்கள் மக்களால் பெரிதும் கவரப்பட்டன.

சினிமாக்களில் நடித்ததன் மூலம் தனக்கு கிடைத்த மக்கள் செல்வாக்கு மற்றும் தனது இயல்பான பேச்சாற்றலின் காரணமாக உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார நிகழ்வுகள், கூட்டங்களுக்கு மக்கள் ஆர்வமுடன் சென்றனர். அதேபோல் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலும் களத்தில் இறங்கி வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

அதன் விளைவாக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதல்முறையாக மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். உதயநிதி ஸ்டாலினும் முதல் முறையாக எம்.எல்.ஏவாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் வெற்றிபெற்ற திமுக அரசின் அமைச்சரவையில் உதயநிதியும் இடம்பெறுவார் என்று அப்போதே பேசப்பட்டது.

ஆனால், அப்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அதே நேரம் திமுக ஆட்சியமைத்த சில மாதங்களிலேயே உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. திமுகவிலும் அவரது செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது. தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாகவே உதயநிதி தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்பார் என்று பேசத் தொடங்கினர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி பலரும் தங்கள் விருப்பத்தை கடந்த ஆண்டிலேயே தெரிவிக்கத் தொடங்கினர். சில மாதங்களாக ஓய்ந்திருந்த இந்த பேச்சு நவம்பர் மாதத்திலிருந்தே மீண்டும் எழத் தொடங்கியது. டிசம்பர் மாதத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக்கப்படுவார் என்ற பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நேற்று அமைச்சர் பி. மூர்த்தியும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பது உறுதி என கூறிய நிலையில் இன்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.