சென்னையில் நாளை செஸ் போட்டி நிறைவு விழா- போக்குவரத்து மாற்றம்..!

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நாளை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

44வது சர்வதேச செஸ் போட்டிகள் கடந்த மாதம் 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையல், பிரதமர் நரேந்திர மோடி போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் மாமல்லபுரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் நிறைவு விழா சென்னை பெரியமேடு ராஜா முத்தையா சாலையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை (9ம் தேதி) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளை சார்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், நாளை மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, ஈ.வெ.ரா பெரியார் சாலை, மத்திய சதுக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக, சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:

* மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வழியே வரும் வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை மற்றும் ஈ.வெ.ரா சாலை வழியாக செல்லலாம்.

* ஈ.வி.கே சம்பத் சாலை ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

* வணிக நோக்கிலான வாகனங்கள் ஈ.வெ.ரா சாலை, கெங்கு ரெட்டி சாலைச் சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

*பிராட்வேயிலிருந்து வரும் வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்க சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கி திருப்பி விடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாக சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களை தவிர்த்து பிற வழித்தடங்களை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தினை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.