நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்திய அரசியல் சட்டத்தை வகுத்த அம்பேத்கர் புகைப்படத்தை அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் வைக்க வேண்டும் எனக் கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், புதுடெல்லி அரசு அலுவலகங்களில் அவரது படத்தைப் பொருத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், திருவள்ளுவர், தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வைக்க அனுமதித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அம்பேத்கர் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அவரது புகைப்படத்தை வைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, அம்பேத்கர் படம் வைப்பது தொடர்பாக ஏற்கனவே உத்தரவு உள்ளதால் மீண்டும் அதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ளதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாக எச்சரித்தனர். இதையடுத்து மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.