நாட்டில் உள்ள டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்தவும், அதை ஒருவரையரைக்குள் கொண்டுவரவும் விரைவில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் மகாநகர் டைம்ஸ் என்ற நாளேடு சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்தவும், வரையரைக்குள் கொண்டுவரவும் விரைவில் மத்திய அரசு சட்டம் கொண்டுவர உள்ளது. முதலில் செய்தி என்பது ஒரு வழித் தொடர்பாக இருந்தது. ஆனால், மின்னணு மற்றும் டிஜிட்டல் மீடியா வளர்ச்சியால், செய்திகளின் தொடர்பு என்பது, பன்முகத்தன்மையாகிவிட்டது. டிஜிட்டல் மீடியாவின் வளர்ச்சி காரணமாக நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் செய்தி கூட சிறிய கிராமத்தைச் சென்று அடைகிறது.
ஆனால், பெரும்பாலான அச்சு ஊடகங்கள், மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை சுயகட்டுப்பாடோடு நடக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. டிஜிட்டல் மீடியாக்களைப் பொறுத்தவரை வாய்ப்புக்கள் இருக்கும் அதேநேரத்தில் சவால்களும் உள்ளன, சமநிலை என்பது தேவைப்படுகிறது. ஆதலால், மத்திய அரசால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யும்.
சட்டத்தில் என்னவிதமான மாற்றங்கள் கொண்டுவர முடியுமோ அதை கொண்டு வருவோம். உங்கள் பணிகளை மிகவும் எளிமையாக்கும் விதத்தில் சட்டங்கள் இருக்கும். இதற்கான மசோதாவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
நாளேடுகளை பதிவு செய்யும் அம்சத்தையும் எளிமையாக்கும் பணியும் நடந்து வருகிறது. 1867ம் ஆண்டு பத்திரிகை மற்றும் நூல்கள் பதிவுச் சட்டத்துக்குப் பதிலாக விரைவில் மத்திய அ ரசு புதிய சட்டத்தைக் கொண்டுவரும்.
இந்த சட்டத்தின் மூலம் ஒருவர் நாளேடு தொடங்குவது தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஆன்-லைனிலேயே முடிக்க முடியும். தற்போது 4 மாதங்கள் வரை ஆகிறது இனிமேல் காலதாமதம் ஆகாது.
எளிமையாக தொழில் செய்யும் கொள்கையையும், எளிமையாக வாழும் கொள்கையையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆதலால் நிறுவனங்களைப் பதிவு செய்வதிலும் புதிய மாற்றம் இருக்கும்.
மக்களுக்கு சரியான நேரத்தில் சரியான செய்திகளை நாளேடுகள் கொண்டு வர வேண்டும். மத்தியஅரசின் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க நாளேடுகள் முன்வர வேண்டும்.
அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அல்லாமல் ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்களின் நலன்களில் மத்தியஅரசு அக்கறை கொண்டு செயல்படுகிறது, கொரோனா காலத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பஙக்ளுக்கு நிதியுதவியும் அரசு அளித்துள்ளது இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்
Leave a Reply