ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் 7வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோகின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். ஏற்கனவே நடந்த கூட்டங்கள் கொரோனா காரணமாக காணொலி மூலம் நடைபெற்ற நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின் நேரடியாக நடைபெறும் கூட்டம் இது.
இதில், வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநில வளர்ச்சிகள் குறித்தும், கூட்டாட்சி அடிப்படையில் சுயசார்பு திட்டங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில அளவில் முதல்வர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால், சில காரணங்களுக்காக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணி கட்சி ஆளும் மாநில முதல்வர்கள், எதிர்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலமும் கவனம் செலுத்த வேண்டும். இறக்குமதியை குறைப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் அதற்கான வாய்ப்புகளையும் அடையாளம் காணவேண்டும். உள்ளூர் பொருட்களை பயன்படுத்த மக்களை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.