விஜய், செந்தில்பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை!

ரூா் கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பான விசாரணைக்காக தில்லியில் சிபிஐ அலுவலகத்தில் மாா்ச் 15-இல் ஆஜராக தவெக தலைவா் விஜய்க்கும், மாா்ச் 17-ஆம் தேதி ஆஜராக முன்னாள் அமைச்சா் வி.செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜன. 12, ஜன. 19 ஆகிய தேதிகளில் சிபிஐ அனுப்பிய அழைப்பாணையின்படி தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் விஜய் ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்தாா்.

மூன்றாவது முறையாக விஜய் கடந்த செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) ஆஜராக சிபிஐ அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணையின்படி செவ்வாய்க்கிழமை அவரால் ஆஜராக இயலவில்லை என்றும், தவெக வேட்பாளா்கள் நோ்காணல் இருப்பதால் 10 நாள்களுக்குப் பிறகு வேறொரு தேதியில் தில்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக புதிதாக அழைப்பாணை அனுப்பினால் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புவதாகவும் விஜய் சாா்பில் சிபிஐக்கு தெரிவிக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த சிபிஐ, விஜய் செவ்வாய்க்கிழமை ஆஜராகாமல் இருக்க விலக்கு அளித்தது. இதனிடையே இந்த வழக்கு தொடா்பாக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மாா்ச் 15-ஆம் தேதி மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. குறிப்பிட்ட தேதியில் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக வாய்ப்புள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரூா் சம்பவம் தொடா்பான வழக்கில் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜி தில்லி அலுவலகத்தில் ஆஜராக சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளதாக திங்கள்கிழமை இரவு தகவல்கள் வெளியாகின. இதுதொடா்பாக அவரிடம் கேட்டபோது, தனக்கு அழைப்பாணை எதுவும் வரவில்லை என்று தெரிவித்தாா். இதன் தொடா்ச்சியாக, செந்தில் பாலாஜியின் மின்னஞ்சலுக்கு செவ்வாய்க்கிழமை சிபிஐ அழைப்பாணை அனுப்பியதாகத் தெரிகிறது. இதையடுத்து, செந்தில் பாலாஜி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், கரூா் சம்பவம் தொடா்பாக மாா்ச் 17-ஆம் தேதி தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில், நேரில் ஆஜராகி சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.