அதிமுக அலுவலகத்திலேயே இருக்கும் வெள்ளிவேல்- சிவி சண்முகம் குற்றச்சாட்டுக்கு சிபிசிஐடி சொன்ன பதில் ..!

சென்னை: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட போது காணாமல் போனதாக சொல்லப்பட்ட வெள்ளி வேல் அங்கேயே இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுக் குழு கூட்டம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூடியது. இந்த கூட்டம் ஓபிஎஸ் தரப்பின் எதிர்ப்பை மீறி அதே நேரம் நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த பொதுக் குழு நடந்து கொண்டிருந்த போதே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவரை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து பூட்டப்பட்டிருந்த அலுவலக கதவை ஓபிஎஸ் தரப்பினர் உடைத்து கொண்டு உள்ளே சென்ற போது இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் சிலர் காயமடைந்தனர். அங்கிருந்த பொருட்கள் சிதறின. இதையடுத்து அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட பரிசு பொருட்கள், முக்கிய ஆவணங்களை காணவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஓபிஎஸ் தரப்பு மீது புகார் அளித்தார்.

தகவலறிந்த வருவாய் துறையினர் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதையடுத்து அதிமுக அலுவலக வன்முறை தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருவதால் அங்கு செல்ல தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அனுமதி இல்லை. இன்றைய தினம் காலை 8 மணி முதல் அதிமுக அலுவலகத்தில் வன்முறை குறித்து சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் மேல் தளம், கீழ் தளம் என இரு தளங்களிலும் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தலைமை அலுவலகத்தில் காணாமல் போனதாக புகார் கூறப்பட்ட வெள்ளி வேல் அலுவலகத்திலேயே இருக்கிறது என போலீஸார் தெரிவித்தனர். மேலும் ஜூலை 11 இல் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட எந்த ஆயுதங்களும் அலுவலகத்தில் இல்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி வேலை காணவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் கூறியிருந்ததாக புகார் கூறப்பட்ட நிலையில் வெள்ளி வேல் அங்கேயே இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வாகி இன்று  முதல் முறையாக தலைமை அலுவலகததிற்கு எடப்பாடி பழனிசாமி செல்லும் நிலையில் சிபிசிஐடி ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.