காவிரி மேலாண்மை ஆணையம் பிப்.1-ல் கூடுகிறது- தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு.!!

டெல்லி: பிப்.1-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடக்கிறது.

3 மாதங்களுக்கு பிறகு பிப்ரவரி 1-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு 5.26 டி.எம்.சி. தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம், தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுகிறதா என்பதையும் கண்காணிக்கிறது. காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது.