புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின் போது 314 கி.மீ. தூரத்தில் இருந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப் படை கேப்டன் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய முப்படைகளும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தன. அதில் தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவின் ராணுவ வலிமையை பார்த்து உலக நாடுகள் அதிசயித்தன.
இந்நிலையில், பாகிஸ்தான் அனுப்பிய போர் விமானம் அந்நாட்டின் வான் பரப்பில் 314 கி.மீ. தூரத்தில் பறந்து வரும்போதே இந்திய விமானப் படை குரூப் கேப்டன் அனிமேஷ் பட்னி சுட்டு வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் உலகளவில் 314 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு போர் விமானத்தை துல்லியமாக சுட்டு வீழ்த்திய வரலாறு இல்லை என்கின்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ரஷ்யாவின் எஸ் – 400 வான் பாதுகாப்பு கவசம் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தப்பட்டது. ரேடார், செயற்கைக் கோள் உட்பட ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்துடன் செயல்படும் இந்த எஸ் – 400 கவசம் மிக முக்கிய பங்காற்றியது.
ஆபரேஷன் சிந்தூரின் போது துணிச்சலாக போரிட்டு பாகிஸ்தான் படைகளை நிலைகுலைய செய்த 15 வீரர்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர் சக்ரா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அவர்களில் விமானப் படையைச் சேர்ந்த 9 வீரர்கள், 4 ராணுவ வீரர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த 2 வீரர்கள் அடங்குவர். விமானப் படை தரப்பில் விருது பெற்றவர்களில் குரூப் கேப்டன் அனிமேஷ் பட்னியும் ஒருவர்.
ராஜஸ்தான் மாநிலம் பரான் பகுதியைச் சேர்ந்தவர் அனிமேஷ். கடந்த 2005-ம் ஆண்டு மிக்-29 போர் விமான பைலட்டாக பணியில் சேர்ந்தார். அதன் பின் அவரது போர் தந்திரங்கள், திறமையால் படிப்படியாக உயர்ந்தார். ஒரு கட்டத்தில் ரஷ்யாவின் எஸ் – 400 வான் பாதுகாப்பு கவசத்தை தலைமையேற்று நடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில்தான் பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அனிமேஷ், கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தானின் சாப் 2000 ஏஇடபிள்யூ அண்ட் சி போர் விமானத்தை அந்நாட்டு வான் பரப்பில் தங்கா என்ற இடத்தில் 314 கி.மீ. தூரத்திலேயே சுட்டு வீழ்த்தினார்.
அனிமேஷின் முடிவெடுக்கும் திறமை, உள்ளுணர்வு, போர் திறமை, தந்திரம், தொழில்நுட்ப அறிவு, துல்லியமாக கணித்தல் மற்றும் தாக்குதல் நடத்தும் இடத்தை தேர்வு செய்தல் போன்ற அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக இந்திய விமானப் படை பாராட்டு தெரிவித்துள்ளது.