இதுகுறித்து இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. நம் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் நாம் தரும் மரியாதை இது. ஆட்சியில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்த, இந்த அரசு உறுதியுடன் முன்னேறி வருகிறது” என கூறியுள்ளார். இந்த சட்டம் அமலுக்கு வருவதன் மூலம், தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் போது 816 தொகுதிகளில் 273 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்டம் குறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பவை: “இன்று தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், பெண்கள் முன்னேற்றத்துக்கான முக்கியமான, வரலாற்று சிறப்புமிக்க அடியை நம் நாடு எடுத்து வைக்கப்போகிறது. நம் தாய்மார்கள், சகோதரிகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதையே, நம் தேசத்தின் மரியாதை. உத்வேகத்துடன், சரியான திசையில் நாம் செல்கிறோம்” என்றுள்ளார் பிரதமர்.முன்னதாக “இந்தியாவின் மகள்கள் காத்திருப்பதை அனுமதிக்க முடியாது. இடஒதுக்கீட்டைத் தாமதப்படுத்துவது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி” என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் ஏப்ரல் 16 முதல் 18 வரையிலான 3 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று கூடியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 2023-ல் நிறைவேற்றப்பட்ட “நாரி சக்தி வந்தன் அதிநியம்” சட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை இந்தக் கூட்டத்தொடரில் நீக்கி, அச்சட்டத்தை 2029-க்குள் அமல்படுத்த வழிவகை செய்யப்பட உள்ளது.




