கனடா சாலை விபத்து: இந்திய மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; 2 பேர் மருத்துவமனையில் அனுமதி.!!

கனடா: கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியாகியுள்ளனர். கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரியா உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நெஞ்சைப் பிளக்கும் சோகச் சம்பவம் கனடாவில் நடந்துள்ளது. டொரன்டோ அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் ஐந்து இந்திய மாணவர்கள் இறந்தனர்.

இருவர் மருத்துவமனையில் உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். டொரன்டோவில் உள்ள இந்தியக் குழு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகிறது’ என்று பதிவிட்டுள்ளார். மாணவர்கள் சென்ற வேன், முன்னே சென்ற ட்ராக்டர் ட்ரெய்லரில் மோதி விபத்து நடந்துள்ளதாகத் தெரிகிறது.