உங்களை வழியனுப்ப நானும் வரலாமா தலைவரே… தழுதழுத்து பேசிய நாசர்… வரச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!

ன்பது நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

அந்த நாடுகளில் தொழிலதிபர்களைச் சந்தித்து முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பது குறித்து பல சந்திப்புகளை நடத்தவிருக்கிறார். வெளிநாடுவாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுற்றுப்பயணம் செல்வதற்காக, இன்று மே 23-ம் தேதி, சென்னை விமான நிலையத்துக்கு வந்த முதல்வரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில், நாசரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஆவின் நிர்வாகத்தில் சீர்கேடு, தன் மகன் ஆசிம்ராஜா மீதான புகார்கள், தன் ஆதரவாளரான பூந்தமல்லி கமலேஷின் அடாவடி அரசியல் எனப் பலதரப்பட்ட புகார்களில் சிக்கி பதவியை இழந்தார் நாசர். அவர்மீது முதல்வர் கடும் கோபத்தில் இருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் பரபரத்தன. தன்னுடைய நீண்டகால நண்பரான நாசரையே முதல்வர் தூக்கி எறிந்ததால், அமைச்சரவைக்குள்ளும் அதிர்வலைகள் கிளம்பின. இந்தச் சூழலில்தான், முதல்வரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நாசர்.

இந்தச் சந்திப்பு குறித்து ஆவடி மாநகர தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “நாசர் மீது முதல்வருக்கு வருத்தம் இருந்தது உண்மைதான். அமைச்சர் பதவியைப் பறிப்பதற்கு முன்பாகக்கூட, நாசரை நேரில் அழைத்துப் பேசினார் முதல்வர். சில விஷயங்களைக் குறிப்பிட்டுக் கண்டித்தார். அப்போது, தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்கான காலக்கெடுவெல்லாம் நாசருக்கு முடிந்துபோயிருந்தது. பதவி பறிபோனவுடன், வீட்டிலேயே இருக்க விரும்பவில்லை நாசர். கட்சிக்காரர்கள் துக்கம் விசாரிப்பார்கள் என்பதாலேயே, குடும்பத்துடன் கொடைக்கானலுக்குச் சென்றுவிட்டார். முதல்வர் வெளிநாடு கிளம்பும் தேதி நெருங்கியவுடன்தான் சென்னைக்குத் திரும்பினார். மே 23-ம் தேதி காலை முதல்வர் வீட்டுக்கு போன் போட்ட நாசர், ‘வழியனுப்ப நானும் வரலாமா தலைவரே…’ எனத் தழுதழுத்தவுடன், முதல்வருக்கும் மறுப்பு சொல்ல மனம் வரவில்லை. விமான நிலையத்துக்கு வரச் சொல்லிவிட்டார்.

விமான நிலையத்தில், முதல்வருக்கு வேட்டி வழங்கி வாழ்த்து தெரிவித்தார் நாசர். அவருக்குக் கைகொடுத்த முதல்வர், ‘எப்படிய்யா இருக்க… பழசையெல்லாம் நெனைச்சுட்டு இருக்காம கட்சி வேலையைப் பாரு’ எனச் சொல்லி, தோளில் தட்டிக் கொடுத்தார். முதல்வரின் கரிசனத்தை நாசர் மட்டுமல்ல, நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. பதவி பறிபோன பரிதவிப்பில் இருந்தவருக்கு, முதல்வரின் வார்த்தைகள் ஆறுதல் அளித்திருக்கின்றன. மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால், இப்போதைக்கு முதல்வரின் கரிசனப் பார்வைக் கிடைத்திருப்பதே பெரிய விஷயம்தான்” என்றனர்.

அமைச்சர் பதவியிலிருந்து நாசரை நீக்கிய பிறகு, அவர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருக்கும் திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை விவரங்களைக் கேட்டாராம் முதல்வர். “இதுவரை ஒன்றரை லட்சம் பேரைப் புதிய உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறார் நாசர்” எனப் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார்கள் அறிவாலய சீனியர்கள். அதன் பிறகுதான் நாசர் மீதான கோபம் முதல்வருக்குத் தணிந்தது என்கிறது தி.மு.க வட்டாரம்..