தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற (2026) தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய ஏழு சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.
இதில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாத நிலையில், இவ்விரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டேபர் 6-ம்தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 9-ம்தேதி தொடங்கியது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்நாட்டின் அரசியல் களமும், தேர்தல் களமும் பரபரக்க தொடங்கிவிட்டன.
தனது பலத்தை அதிகரிக்க இடைத்தேர்தலை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆளும் கட்சியான தவெக, ஆட்சியை இழந்த சோகத்தில் இருக்கும் திமுக, தங்களின் சொந்த உறுப்பினர்களை இழந்து, இடைத்தேர்தல் அறிவித்த மறுநாளே விருப்பமனு விநியோகத்தை தொடங்கிய அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் யாரும் எதிர்பாராத விதமாக களத்தில் இறங்கிய கம்யூனிஸ்டுகள் என தமிழ்நாடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இம்முறை ஐந்து முனை போட்டி நிலவுகிறது.
கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருமே தற்போது தவெக சார்பில் இடைத்தேர்தலில் களமிறங்குவது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் திமுக மதுராந்தகத்தில் பரந்தாமனையும், தாராபுரத்தில் சுகன்யாவையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
மறுபுறம் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மகளிரணி இணைச் செயலருமான முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலரும், மாவட்ட ஊராட்சிக் குழு 12-ஆவது வாா்டு முன்னாள் உறுப்பினருமான கே. பானுமதி ஆகியோா் போட்டியிடுகின்றனர். இதற்கிடையே நாம் தமிழர் கட்சி சார்பாக மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு. கார்த்திகா ஆகியோர் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார். நடைபெற உள்ள இடைத்தேர்தலில், இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி தவெக அரசுக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஒருபுறம் தவெக தனது முதல் இடைத்தேர்தல் வெற்றியை பதிவு செய்ய தீவிரமாக களமிறங்கியுள்ளது. மறுபுறம் அதிமுக மற்றும் திமுக தனது பாரம்பரிய வாக்கு வங்கியையும், இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கையும் நம்பி களத்தில் இறங்கி உள்ளது. மேலும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (செப்டம்பர் 16) கடைசி நாள் என்பதால், அரசியல் கட்சிகள் தங்களது இறுதி கட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 126Aன் படி, இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான, வரும் அக்டோபர் 6-ம்தேதி காலை 7:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை அச்சு அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை (Exit Polls) நடத்துவதும், அதன் முடிவுகளை வெளியிடுவதும் அல்லது விளம்பரப்படுத்துவதும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதேபோல் பிரிவு 126(1)(b)-ன் கீழ், வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்திற்கு முந்தைய, 48 மணி நேர கால அளவில், தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் அல்லது வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான எந்தவொரு செய்தியையும் மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.








