திருச்சியில் மாற்றுத்திறன் மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு….

20 ஆண்டுகால வரலாற்றில் எங்களை தலைநிமிர வைத்தவர் தமிழ்நாடு முதல்வர்
நன்றி அறிவிப்பு மாநாட்டில் சிறப்பு பயிற்றுநர்கள் உருக்கம். திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. விழாவின் நிறைவாக விழாப்பேருரை ஆற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்பொழுது,
பேச முடியாத குழந்தைகளுக்கும் பேசச் சொலிக்கொடுக்கும் நீங்கள் உங்கள் கோரிக்கைகளை என்னிடம் சொல்ல வேண்டியதில்லை. சொல்லாமலேயே செய்து தருவேன் என்றும், நடக்க முடியாத குழந்தைகளுக்கு நடைபயில கற்றுக்கொடுக்கும் நீங்கள் உங்கள் கோரிக்கைகளுக்காக நடையாய் இனி ஒருபொழுதும் நடக்க வேண்டும். உங்களைத் தேடி, உரிய தீர்வுடன் நானே வருவேன் எனக் குறிப்பிட்டபொழுது அங்கு குழுமியிருந்தவர்களின் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. முன்னதாக விழாவின் தொடக்கத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கற்றல் உபகரணக் கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார். விழாவில் சங்கத்தின் மாநிலத் தலைவர் சேதுராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷ்குமார் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் முனைவர் குமார்
பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் அறிவொளி திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வி அலுவலர் கலந்து கொண்டனர். அரசுக்கு நன்றி தெரிவித்து பொதுச்செயலாளர் காணிராஜா மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் லெத்திசா மேரி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 1300 க்கும் மேற்பட்டோர் வந்திருந்த இந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில்
தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் சைகை மொழியில் பாடப்பட்டபொழுது அரங்கம் நெகிழ்ச்சியில் நிறைந்தது. விழாவின் நிறைவாக திருச்சி மாவட்ட மகளிரணி தலைவி அமிர்த லூர்து மேரி நன்றியுரை ஆற்றினார்.