முதல்வர் நிதிஷ்குமாரின் பதவிக்கு சிக்கல் முதல்வர் பதவிக்காக லாலு மகன் தேஜஸ்வி தீவிரம் …

பாட்னா: பீகார் மாநில அரசியலில் 14 எம்எல்ஏக்களால் நிதிஷ்குமாரின் முதல்வர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி இரண்டாக உடையும் நிலையில் புதிதாக முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தும் வேலையில் லாலுவின் மகன் தேஜ்வி ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.   முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சி இரண்டாக உடையக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. ஜேடியூவின் 14 எம்.எல்.ஏக்கள் கலகக் குரல் எழுப்பி ராஜினாமா செய்துவிட்டால் நிதிஷ் குமாரின் முதல்வர் பதவி பறி போய் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் புதிய முதல்வராகும் நிலைமை உருவாகி உள்ளது.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஜேடியூ, ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ்குமாருக்கும் லாலு பிரசாத் யாதவுக்கும் கருத்து மோதல்கள் என கூறப்பட்டன. ஆனால் இதனை இருவருமே மறுத்து வந்தனர். நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்ட்டணிக்கு திரும்புவார்; இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. டெல்லியில் நாளை ஜேடியூவின் தேசிய கவுன்சில் கூட்டத்தையும் நிதிஷ்குமார் கூட்டியுள்ளார்.

இந்த நிலையில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர் ஒருவர் 11 ஜேடியூ எம்.எல்.ஏக்களுடன் ரகசிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷ் குமாருக்கு எதிராக இவர்கள் போர்க்கொடி தூக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை இழக்கும் நிலைமை உருவாகி உள்ளது.நிதிஷ்குமாரின் முதல்வர் பதவியை பறிப்பதில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி தான் தீவிரம் காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை மொத்தம் 122 எம்.எல்.ஏக்கள். தற்போது சட்டசபை கட்சிகள் நிலவரம்:

லாலுவின் ஆர்ஜேடி- 79

நிதிஷ்குமாரின் ஜேடியூ- 45

காங்கிரஸ் -19

இடதுசாரிகள் – 16

சுயேட்சை- 1

பாஜக – 78

ஹெச்.ஏ.எம்.எஸ்-4

தற்போதைய நிலையில் ஆர்ஜேடி + காங்கிரஸ் + இடதுசாரிகளுக்கு மொத்தம் 115 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவை 7 எம்.எல்.ஏக்கள். நிதிஷ் குமார் கட்சியின் 14 எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தாலோ கலக குரல் எழுப்பியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ பீகார் சட்டசபை பலம் 243ல் இருந்து 229ஆக குறையும். அப்போது பெரும்பான்மைக்கு தேவை 115 எம்எல்ஏக்களாக இருக்கும். இதனால் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு இல்லாமலேயே ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பீகார் புதிய முதல்வராக பதவியை கைப்பற்றவும் முடியும். இந்த வியூகத்துடன் தான் லாலு கட்சி களமாடுவதாக அம்மாநில தலைவர்கள் கூறுகின்றனர். இதனால் பாஜ எம்எல்ஏக்கள் யாரும் குதிரை பேரத்தில் சிக்கிவிட கூடாது என்பதற்காக அத்தனை பேரையும் உடனடியாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு அனுப்பும் நடவடிக்கையில் அக்கட்சி இறங்கிவிட்டது. இதனால் பீகாரில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது