பேருந்து தீ விபத்து… 20 பயணிகள் பலி – பிரதமர் மோடி இரங்கல்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் 57 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. நேற்று மதியம் 3 மணி அளவில் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். போக்ரான் எம்எல்ஏ பிரதாப் பூரி இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார். அருகிலிருந்த மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீக்காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்தில் சிக்கிய பஸ், புதிதாக வாங்கி ஐந்து நாட்களே ஆனதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

பிரதமர் அலுவலகம் (PMO) சமூக ஊடக தளமான X இல், பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டி, “ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடந்த விபத்தில் உயிர் மற்றும் சொத்து இழப்பு குறித்து நான் வருத்தமடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என்று பதிவிட்டுள்ளது.

விபத்து குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார் . “ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பேருந்து தீ விபத்தில் பல உயிர்கள் இழந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு குழந்தைகள், நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது பயணிகள் தீக்காயமடைந்தனர் . காயமடைந்த பயணிகள் முதலில் ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் அவர்கள் ஜோத்பூருக்கு அனுப்பப்பட்டனர். பெரும்பாலான பயணிகளுக்கு 70 சதவீதம் வரை தீக்காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படுவார்.

ஜெய்சால்மர் பேருந்து விபத்து குறித்து முதல்வர் பஜன் லால் சர்மா ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்த முழுமையான தகவல்களைப் பெற ஜெய்சால்மர் கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளார். தகவல்களின்படி, முதல்வர் பஜன் லால் சர்மா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை மதிப்பாய்வு செய்யலாம்.