வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி பாஜக நிர்வாகி கொடூர கொலை – புதுச்சேரியில் பயங்கரம்..

புதுச்சேரி : புதுச்சேரி வில்லியனூரில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாண்டிச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். செந்தில்குமரன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.

பாஜக பிரமுகரான செந்தில் குமரன் வில்லியனூர் பகுதியில் தனது வீட்டுக்கு அருகே பேக்கரி கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது நேற்று இரவு (மார்ச் 26) சுமார் 10 மணி அளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசி, கத்தியால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், செந்தில் குமரன் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி, கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் இரவு நேரத்தில் அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது..