இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா… இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த பிரதமராக வாய்ப்பு..!

போரிஸ் ஜான்சன் 2019-ம் ஆண்டு பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்றார்.போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது.

கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார். இதனிடையே, கிறிஸ் கடந்த ஜூன் 29-ம் தேதி புதன்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதையடுத்து, கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவில் இருந்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், கிறிஸ் மீது போரிஸ் ஜான்சன் அரசு சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவகாரத்தை போரிஸ் ஜான்சன் அரசு சரிவர கையாளவில்லை என கூறி அமைச்சரவையில் இருந்து நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.கடந்த சில தினங்களில் மட்டும் சுமார் 50 அமைச்சர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். அதன் காரணமாக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. இதற்கிடையே, போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியில் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கட்சியினரே தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தது. முதலில் குற்றங்களை மறுத்த போரிஸ் ஜான்சன் பின் அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரினார். இறுதியில் தீர்மானம் தோல்வியடைந்ததால் போரிஸ் ஜான்சன் பதவி தப்பியது. இருப்பினும் அவருக்கு கட்சியில் எதிர்ப்பாளர்கள் அதிகரித்தனர்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகக்கோரி அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்து உள்ளனர். இதனால் தொடர் நெருக்கடியில் போரிஸ் ஜான்சன் சிக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று  மாலை போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார் என்றும் அக்டோபரில் நடைபெறும் கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளை திருமணம் செய்திருக்கும் ரிஷி சுனக் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.