எல்லை பதற்றம் : இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு- சீனாவுக்கு எச்சரிக்கை.

ருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் எல்லைப் பகுதியில் சீனா, இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, பதற்றத்தைத் தணிக்க இந்தியா எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதேசமயம், சீன ராணுவம் தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி ராணுவத்தைக் குவிப்பது, கட்டுமானங்களை எழுப்பி வருகிறது என்று அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சீ பகுதியில் கடந்த 9ம் தேதி சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்று, அங்கு ஏற்கெனவே இருக்கும் சூழலை தன்னிச்சையாக மாற்ற முயன்றது. சீன வீரர்களின் இந்த தன்னிச்சையான செயலை இந்திய வீர்கள் துணிச்சலுடன், தீர்மானமாக எதிர்த்தனர்.

இதனால் இருதரப்பு படைகளுக்கும் இடையே வார்த்தை மோதலும், அதைத் தொடர்ந்து கைகலப்பும் ஏற்பட்டது. இதில் இருதரப்பு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. ஆனால், உயிரிழப்பு ஏதும் இல்லை. இதையடுத்து, இரு நாட்டு கமாண்டர்களும் தலையிட்டதையடுத்து, சீன ராணுவத்தினரும், இந்திய படையினரும் திரும்பிச் சென்றனர்.

இந்த மோதல் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் கருத்துத் தெரிவித்துள்ளது. பென்டகன் ஊடகப்பிரிவு செயலாளர் பாட் ரைடர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ” இந்தியா, சீனா எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடக்கும் சம்பங்களை அமெரிக்கா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சீனா தொடர்ந்து எல்லைப்பகுதியில் ராணுவக் கட்டுமானங்களை எழுப்புவதும், படைகளைக் குவித்தும் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு நட்பாக இருக்கும் நாடுகள், கூட்டாளி நாடுகள் இருக்கும் பகுதியில், சீனா தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், செயல்திறன் மிக்கதாக, வலிமையானதாக காட்டிக்கொள்ளவும் செய்யும் செயல்பாடுகளை இங்கு சுட்டிக்காட்டுவது முக்கியம்.

எங்கள் கூட்டாளி நாடுகள், நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் முயற்சிப்போம், பதற்றத்தைத் தணிக்கஇந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்காஆதரவாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் கடும் உயிரிழப்பு ஏற்பட்டது.அதற்கு பின் தற்போது 2வதுமுறையாக பெரிய மோதல் நடந்துள்ளது.

வெள்ளை மாளிகை ஊடகச்செயலாளர் கரின் ஜீன் பியரி கூறுகையில் ” இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பதற்றத்தை அமெரிக்கா உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. விரைவில் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் தணிய வேண்டும் என்று விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.