கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஜூடிசியல் அகடாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கோவையில் கடந்த சில மாதங்களாக அரசு அலுவலகம் , விமான நிலையம், காவல் துறை மற்றும் கல்வி நிலையங்கள் என தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய தொடர் சோதனைகளில் அவை புரளி என்பது தெரிய வந்தது. எனினும் இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கும் நபரை கண்டுபிடிக்க முடியாமல் சைபர் கிரைம் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் ஜுடிசியல் அகடமி ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதனையடுத்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். நீதிமன்ற வளாகம் மற்றும் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களிலும், ஜூடிசியல் அகடமி வளாகத்திலும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் இது புரளி என்பது தெரிய வந்தது. இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், சைபர் கிரைம் போலீசார் மிரட்டல் விடுக்கும் நபர்களை பிடிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.