கிடா வெட்டில் நடந்த கொலை – பாஜக பிரமுகருக்கு ஆயுள் தண்டனை..!

கோவை அருகே உள்ள ஆலாந்துறை, கோடக்காடு ,கணபதி காரர் தோட்டத்தில் கடந்த 30- 9 -2018 அன்று இரவு கிடா வெட்டு விருந்து நிகழ்ச்சி நடத்தினார்கள் .இதில் கலந்து கொண்ட கணபதி பகுதி பா.ஜ.க. துணை தலைவர் குட்டி என்கிற கந்தசாமி ( வயது 29) என்பவருக்கும் நாகராஜ் ( வயது 21) என்பவருக்கும் இடையே விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூல் குறித்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கந்தசாமி, நாகராஜை கத்தியால் சரமாரி குத்தினார். இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார் .இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கந்தசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர் . இந்த வழக்கு விசாரணை கோவை 5 – வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி சிவக்குமார் குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமிக்கு ஆயுள் தண்டனையும். ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்..