இந்தியா கூட்டணி இன்று நாடு தழுவிய போராட்டம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ச்சியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகிறது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் என்பதால், இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வழக்கம்போல நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. மக்களவையில் மதியம் பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென எம்பிக்களின் இருக்கையின் மீது இளைஞர் ஒருவர் குதித்திருக்கிறார். பார்வையாளர்கள் மாடத்திலிருந்து யாரோ தவறி விழுந்துவிட்டார்கள் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு சில விநாடிகளில் இளம் பெண் ஒருவரும் இதேபோல எம்பிக்களின் சீட் மீது குதித்திருக்கிறார். அப்போதுதான் எம்பிக்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே உடனடியாக அவர்கள் கூச்சலிட தொடங்கியுள்ளனர். கீழே குதித்தவர்கள் தங்கள் ஷுக்களிலிருந்து மர்ம பொருள் ஒன்றைய வெளியில் எடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியுள்ளது. இது லைட்டான மூச்சு திணறலை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர்களை நாடாளுமன்ற காவல்துறையினரும், எம்பிக்களும் மடக்கி பிடித்துள்ளனர்.

இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு அவையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவையினுள் இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே, வண்ண புகை வீசும் பட்டாசு போன்ற பொருளை கொண்டு இருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சமே பாதுகாப்பு என்றுதான் சொல்லப்பட்டது. அப்படி இருக்கையில், இது போன்ற அத்துமீறல் எப்படி நடந்தது? என்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் நடந்த மறுநாள் டிசம்பர் 14ஆம் தேதி அவை மீண்டும் கூடியபோது, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து பேசினார். ஆனால், உரிய விளக்கம் அளிக்கவில்லை. அதாவது நாடாளுமன்றத்தில் நுழைய வேண்டும் எனில் எம்பிக்களின் கடிதம் அவசியம். அப்படி இருக்கும்போது, 13ம் தேதி அத்துமீறலில் ஈடுபட்ட இருவருக்கு மைசூர் நாடாளுமன்ற தொகுதியின் பாஜக உறுப்பினர் பிரதாப் சிம்ஹாதான் கடிதம் வழங்கியிருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பதாகைகளை தாங்கி கேள்வியெழுப்பினர்.

ஆனால் மத்திய அரசு தர்ப்பிலிருந்து பதில் அளிக்கப்படவில்லை. மாறாக புதிய நாடாளுமன்ற சட்டங்களை மீறி, மக்களவையில் பதாகைகளை கொண்டு வந்தததற்காகவும், போராட்டம் நடத்தியதற்காகவும் 140க்கும் அதிகமான எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த சஸ்பெண்ட் விவகாரத்தை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காலை 11 மணியளவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் போராட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.