பொறுமையா இருங்க.. உணர்ச்சிவசப்பட்டு பேசாதீங்க… தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்..!!

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றும், யாரும் உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் 17-ம் தேதி தொடங்குகிறது… எனவே, சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் முருகானந்தம், தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் சிவ்தாஸ் மீனா, வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி மற்றும் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட முதல்வரின் செயலர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.. குறிப்பாக, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளுக்கு தடை விதிப்பதற்கான அவசரச் சட்டம், ஆளுநர் ரவி ஒப்புதலுடன் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு நிரந்தர அந்தஸ்து வழங்க, இதற்கான மசோதா சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கலும் செய்யப்படுகிறது. அதனால், இந்த சட்ட மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி அனுமதியளிக்கப்பட்டது.

அடுத்ததாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், பிடிஆர் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு பயணித்து, பல்வேறு தொழில் முதலீடுகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்துள்ள நிலையில், நிறைய முதலீடுகள் தமிழகம் வரஉள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதனால், தமிழகத்துக்கு வரும் புதிய தொழில்முதலீடுகள், தொழில் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு அனுமதி, சலுகைகள் அளிப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கடுத்தப்படியாக, தமிழகத்தில் குறுவையைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ள நிலையில், நெல் கொள்முதலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.விரைவில் பருவமழைக்காலமும் தொடங்க உள்ளதால், 22 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் வரும்போது, அதனை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்காக மத்திய குழு தமிழகம் வருகிறது.மத்திய அரசு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கொள்முதல் செய்யப்படும் நெல்லை மழையில் நனையாத வகையில் பாதுகாப்பது, கிடங்குகள், அரவைக்கு அனுப்புவது குறித்தும் இக்கூட்டத்தில், விவாதிக்கப்பட்டது.