ட்ரம்ப் நிர்வாகத்திற்குத் தடை

மக்கள் வரிப்பணத்தை வைத்து அரசியல் விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என்று நீதிமன்றம் அரசுக்குத் தடை விதித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

அடுத்த மாதம் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ஆளும் குடியரசு கட்சியும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு விதமான பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, அரசு சார்பில் வரும் விளம்பரங்கள் அதிபர் ட்ரம்ப்பையும், அவரது ஆட்சியையும் புகழும் வகையில் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது, அதிபர் ட்ரம்ப் அரசு பணத்தில் தங்களது கட்சிக்கான விளம்பரத்தையும், தேர்தல் பிரச்சாரத்தையும் மேற்கொள்வதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பாக, நியூயார்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நியூயார்க் கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி ஜெனிஃபர், ‘மக்களின் வரிப்பணத்தில் கிடைக்கும் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, தங்களுக்கான விளம்பரத்தை வெளியிடுவது சட்டவிரோதம்’ எனத் தெரிவித்தார். எனவே, உடனடியாக இந்த அனைத்து விளம்பரங்களையும் நிறுத்துமாறு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளிபரப்பாக இருந்த விளம்பரங்கள் உட்பட அனைத்து விளம்பரங்களையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். தேர்தல் நெருங்கும் நிலையில் விளம்பரங்களுக்கான இந்த தடை உத்தரவு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.