பத்ரிநாத்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலின் நடை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பக்தர்களின் வருகைக்காக நேற்று திறக்கப்பட்டது.
கடவுள் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயிலின் நடை நேற்று காலை 6 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க திறந்து வைக்கப்பட்டது. அப்போது, கோயிலை சுற்றிய பிரகாரங்களில் 15 டன் எடை கொண்ட பலவகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே நடை திறப்பின்போது இந்திய ராணுவத்தினர் தெய்வீக ராகங்களை இசைத்து பக்தர்களை பரவசத்துக்கு உள்ளாக்கினர்.
பத்ரிநாத் கோயில் நடை திறப்பு நிகழ்வில், உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பாஜக மாநில பிரிவு தலைவர் மஹிந்திர பட் மற்றும் டெஹ்ரி எம்எல்ஏ கிஷோர் உபத்யாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பத்ரிநாத் யாத்திரை பாதுகாப்பாகவும், சீரானதாகவும் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்பட்டதையடுத்து இந்தாண்டுக்கான சார்தாம் யாத்திரை முழுவீச்சில் தொடங்கியுள்ளது.
பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரியை தரிசிக்கும் சார்தாம் யாத்திரைக்கான நடை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு அடைக்கப்படும். பின்னர், இந்த நான்கு கோயில்களின் நடை வழக்கம்போல் ஏப்ரல்-மே மாதங்களில் பக்தர்களின் வருகைக்காக மீண்டும் திறக்கப்படும்.