கோயம்பேட்டில் ஆயுத பூஜை சிறப்பு சந்தை மீண்டும் திறப்பு: விதிமுறை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்..!!

ண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாகம் சார்பில் ஆயுத பூஜையை முன்னிட்டு பண்டிகை கால பொருட்கள் விற்பனை சிறப்பு சந்தை மீண்டும் திறக்கப்படுகிறது.

வாகன கட்டண வசூலுக்கான ஏலம் வரும் 28ம் தேதி நடக்கிறது. அங்காடி நிர்வாக குழு விதிமுறைகளை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் வரும் 30ம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் கொத்து, இஞ்சி போன்ற பண்டிகை கால பொருட்கள் விற்பனை செய்வதற்காகவும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் விதமாகவும் வியாபாரிகள் வேண்டுகோளுக்கு இணங்க கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு மார்க்கெட்டை சுற்றி உள்ள காலி இடங்களை தேர்வு செய்து அங்கு சிறப்பு சந்தை அமைத்து வியாபாரம் நடத்த முடிவு செய்துள்ளது. கோயம்பேடு வளாகத்திற்கு வரும் வாகனங்களுக்கான கட்டணத்தை வியாபாரம் செய்பவர்களிடம் வசூலிப்பதற்கான ஏலம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் வைப்பு தொகையாக ரூ.50 ஆயிரம் காசோலையாக செலுத்த வேண்டும். தற்போது ஏல மதிப்பாக ரூ.17 லட்சத்து 55 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் அங்காடி முதன்மை அலுவலர் சாந்தி கூறியதாவது: சாலைகளில் வாகனங்களை நிறுத்தி பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. ஆயுத பூஜை பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் ஏலதாரரிடம் தினந்தோறும் அனுமதி சீட்டுகளை காட்டி டோக்கன் பெற வேண்டும். ஒப்பந்த காலம் 30ம் தேதி முதல் வரும் 9ம் தேதி வரை மட்டுமே. ஆயூத பூஜை பொருட்களை அனுமதி சீட்டு இல்லாமல் விற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். மீறினால் அவர்களிடமிருந்து அங்காடி நிர்வாகக் குழுவால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். ஏலதாரர் குறிப்பிட கட்டணத்தை தவிர அதிகப்படியான தொகை வசூலித்தால் முன் அறிவிப்பின்றி உரிமம் ரத்து செய்யப்படும். ஏல நிபந்தனைகளை மீறினால் பணி ஆணை ரத்து செய்ய அங்காடி நிர்வாகக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு. அதேபோல், ஏல கட்டணத்தை திருப்பித்தர இயலாது. கோயம்பேடு நிர்வாக குழுவின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு வியாபாரம் நடைபெற வேண்டும். அதை மீறி வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். இந்த வியாபாரம் குறிப்பிட்ட பண்டிகை காலத்திற்கு மட்டுமே செல்லும்படி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

காய்கறி சிறு கடைகளின் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ”கடந்த இரண்டு வருடமாக கொரோனாவால் ஏலம் விடாமல் இருந்ததால் சிறப்பு சந்தை திறக்கப்படாமல் இருந்தது. மறுபடியும் கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று, ஏற்கனவே அங்காடி நிர்வாக அலுவலர் சாந்தி விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு சந்தை அமைக்க அனுமதி அளித்தார். எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் அங்காடி குழுவினர் சந்தை ஏற்படுத்தி கொடுத்தனர். அதேபோல, வருகிற ஆயதபூஜையை முன்னிட்டு மீண்டும் சிறப்பு சந்தை அமைத்து தர வேண்டும் என்று அங்காடி நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தை திறக்க அங்காடி நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என்றார்.