அட! சூப்பர் ஐடியா!! இலங்கை-யை காப்பாற்றும் இந்திய ரூபாய்.. RBI யின் புதிய திட்டம்.!!

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரூபாய் வாயிலாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் செய்யப் புதிய கட்டமைப்பை உருவாக்கி ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் உடனான வர்த்தகத்தை மேம்படுத்த வழிவகைச் செய்தது.

இத்திட்டம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பின் சரிவைக் காப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் அன்னிய செலாவணி வெளியேற்றத்தைப் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும். ஆனால் இதற்குப் பின்னால் மற்றொரு காரணமும் உண்டு என்பது தான் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வரும் நிலையில், தன்நாட்டுப் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல முக்கியமான நடவடிக்கையை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மத்திய அரசின் ஒப்புதலின் கீழ் ஆர்பிஐ உருவாக்கியுள்ள ரூபாய் மதிப்பிலான பேமெண்ட் முறை ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் மட்டும் அல்லாமல் இலங்கைக்கும் பெரிய அளவில் பயன்பெறும். இலங்கையின் பொருளாதாரம் மோசமான நிலையை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் இந்திய ரூபாய்க்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 0.22 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை தனது பொருளாதாரத்தை மேம்படுத்த முக்கியமான பல பிரிவுகளிலும், துறைகளிலும் இலங்கை ரூபாய்க்குப் பதிலாக இந்திய ரூபாயைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை பொருளாதாரம் கொரோனா பாதிப்பின் போது அதாவது 2020 காலகட்டத்தில் அந்நாட்டுப் பொருளாதாரம் -3.5 சதவீதம் வரையில் சரிந்தது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் தலைவரான நந்தலால் வீரசிங்க இந்த ஆண்டு இலங்கை பொருளாதாரம் -6 சதவீதத்திற்கு மேல் சரியும் என அறிவித்துள்ளார்.

இலங்கையின் நாணய மாற்றம் (Currency Swap) முடிவின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய முதலீடுகளை ஈர்க்க முடிவநதகு மட்டும் அல்லாமல் பேமெண்ட் அனைத்தையும் இந்திய ரூபாய் வாயிலாகச் செய்யும் போது அன்னிய செலாவணி கையிருப்பு பெரிய அளவில் காப்பாற்ற முடியும்.

இதேவேளையில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பணிப்பாளரும், அட்வகேட்டா நிறுவனத்தின் மூத்த அதிகாரியுமான ரொஷான் பெரேரா, இலங்கை நாட்டின் இலங்கை ரூபாய்க்கு இணையாக இந்திய ரூபாயைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜிம்பாப்வே, எல் சால்வடோர் போன்ற பல நாடுகளில் 2 நாணயங்களைப் பயன்படுத்தி வருகிறது. எனவே இதை எப்படி இலங்கையில் அமைய இருக்கும் புதிய அரசு கையாளுகிறது என்பது தான் தற்போதைய முக்கியமான பிரச்சனை.