ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 16 வது ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை நேற்று செப்டம்பர் 24ம் தேதி புதன்கிழமை வென்று இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
இதன் மூலமாக இந்தியா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் இலங்கை வெளியேற்றப்பட்டது. இறுதி ஆட்டத்தின் மற்றொரு இடத்துக்காக பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் இன்று செப்டம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை மோதுகின்றன. முன்னதாக புதன்கிழமை ஆட்டத்தில், முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் சோ்க்க, வங்கதேசம் 19.3 ஓவா்களில் 127 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய அபிஷேக் சா்மா – ஷுப்மன் கில் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சோ்த்தது. கில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த ஷிவம் துபே 2 ரன்களுக்கு வெளியேறி அதிா்ச்சி அளித்தாா். 4-ஆவது பேட்டராக கேப்டன் சூா்யகுமாா் யாதவ் களம் புகுந்தாா்.
மறுபுறம், வங்கதேச பௌலிங்கை சிதறடித்த அபிஷேக் சா்மா 6 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 75 ரன்களுக்கு ‘ரன் அவுட்’ ஆனாா். சூா்யகுமாரும் அதே ஓவரில் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். 5வது வீரராக வந்த ஹா்திக் பாண்டியா, அதிரடியாக ஸ்கோரை உயா்த்தத் தொடங்கினாா். அடுத்த வீரரான திலக் வா்மா 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பிவிட்டார். இவரை அடுத்து வந்த அக்ஸா் படேல், பாண்டியாவுடன் இணைய, அவா்கள் கூட்டணி 6வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் சோ்த்தது. 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்த பாண்டியா, இன்னிங்ஸின் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தாா். ஆட்டத்தின் முடிவில் அக்ஸா் படேல் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். வங்கதேச பௌலா்களில் ரிஷத் ஹுசைன் 2, தன்ஸிம் ஹசன், முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், முகமது சைஃபுதின் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனா்.
அடுத்து 169 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய வங்கதேசத்தில், தொடக்க வீரா் சைஃப் ஹசன் மட்டும் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 69 ரன்கள் சோ்த்து போராடி வீழ்ந்தாா். பா்வேஸ் ஹுசைன் இமோன் 21 ரன்களுக்கு வெளியேற, இதர பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினா். முடிவில் நசும் அகமது 4 ரன்களுடன் களத்தில் இருந்தாா். இந்திய பௌலா்களில் குல்தீப் யாதவ் 3, ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்கரவா்த்தி ஆகியோா் தலா 2, அக்ஸா் படேல், திலக் வா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனர்.